கோவை மாநகராட்சி பள்ளி வளாகத்தில் ஆர்எஸ்எஸ் 'சாகா' பயிற்சி நடைபெற்றதா?

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தபெதிகவினர்
கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தபெதிகவினர்
Updated on
1 min read

கோவை : கோவை மாநகராட்சி ஆரம்ப பள்ளி வளாகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சாகா பயிற்சி நடைபெற்றதாக கூறி, அதனை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் தேவாங்க மேல்நிலைப்பள்ளி சாலையில் மாநகராட்சி ஆரம்பப் பள்ளி உள்ளது. இங்கு இன்று (அக்.9) காலை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சாகா பயிற்சி நடப்பதாக நேற்று வீடியோ வெளியானது. இதையடுத்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அந்த பள்ளி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் கூறும்போது, "பள்ளி வளாகத்தில் இதுபோன்ற பயிற்சி நடைபெறுவது மதநல்லிணத்துக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, பொது இடத்தில் இதுபோன்ற பயிற்சி நடைபெறுவதை அரசு தடுக்க வேண்டும். இந்த பயிற்சி நடைபெற அனுமதி அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்"என்றார்.

இதுதொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கூறும்போது, “ஆர்எஸ்எஸ் மூலம் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சேவா தினத்தை முன்னிட்டு மாநகராட்சி பள்ளியில் இருந்த குப்பை, புதர்களை அகற்றும் பணியில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் ஈடுபட்டனர். இதேபோல, மாவட்டம் முழுவதும் 23 இடங்களில் இந்தப் பணிகள் நடைபெற்றன. இதை திரித்து தவறான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்" என்றனர்.

மாநகராட்சி ஆணையர் எம்.பிரதாப் கூறும்போது, “மாநகராட்சி பள்ளி வளாகத்தில் பயிற்சி நடைபெற்றதாக வந்த புகாரின் அடிப்படையில் கல்வி அலுவலர் விசாரித்து வருகிறார். மாநகராட்சி சார்பில் பள்ளி வளாகத்தில் எந்த பயிற்சிக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.விசாரணைக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in