Published : 09 Oct 2022 01:09 PM
Last Updated : 09 Oct 2022 01:09 PM
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவின் டிவிட்டர் பக்கத்தில் ‘எங்கள் வீட்டில் அல்சேஷன் நாய் ஒன்றை பிரியமாக வளர்த்தோம். ஆனால், ஒருநாள் அதற்கு வெறிபிடித்து மாடு, கன்றுகளை கடிக்கத் தொடங்கியது. நாய் பிடிப்பவரிடம் சொன்னோம்.
அவர் கல், மூங்கிலால் நாய் தலையில் அடித்தார். இதில் நாய் இறந்தது. இது வருத்தமாக உள்ளது. என்ன செய்வது?.' என்று கடந்த செப். 21-ம் தேதி பதிவிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து நாயைக் கொடூரமான முறையில் கொலை செய்தோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரும், விலங்குகள் நல ஆர்வலருமான ஸ்வப்னா சுந்தர் என்பவர் புதுடெல்லியில் உள்ள தேசிய விலங்கு நல வாரியத்துக்கு இ-மெயிலில் புகார் அனுப்பினார்.
இந்த புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், நடவடிக்கை குறித்து ஒரு வாரத்துக்குள் பதில் அனுப்பவும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி, செந்தில்குமார் எஸ்.பி.க்கு தேசிய விலங்கு நல வாரியம் கடிதம் அனுப்பியுள்ளது.
ஹெச்.ராஜாவிடம் கேட்டதற்கு, ‘தமிழகத்தில் சிலர் வெறி பிடித்ததுபோல தொடர்ந்து பேசி வருகின்றனர். அவர்களுக்கு உரைக்க புத்தி புகட்ட வேண்டும் என்பதற்காக ‘ட்வீட்' செய்திருந்தேன். மற்றபடி, அப்படி ஒரு சம்பவம் ஏதும் நடக்கவில்லை. விசாரித்தால் விளக்கம் தர தயாராக உள்ளேன்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT