

சென்னை: சென்னை மயிலாப்பூரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காய்கறி வாங்கினார். நேற்று மாலை சென்னையிலிருந்து டெல்லி செல்வதற்காக விமான நிலையம் புறப்பட்ட அவர் வழியில் மயிலாப்பூரில் தெருவோர கடையில் காய்கறி வாங்கினார்.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோ நிர்மலா சீதாராமனின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில், ”சென்னை மயிலாப்பூர் மார்கெட்டில் நிதியமைச்சர் காய்கறி வாங்கினார். அங்கு அவர் காய்கறி வியாபாரிகளுடனும், உள்ளூர்வாசிகளுடனும் உரையாடினார்” என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், நிர்மலா சீதாராமன் சக்கரவல்லி கிழங்கு, பாகற்காய் போன்ற காய்கறிகளை வாங்கினார்.
முன்னதாக நேற்று காலையில் மயிலாப்பூரில் சிறப்புக் குழந்தைகளுக்கான மையம் ஆனந்த கருண வித்யாலயத்தை நிதியமைச்சர் தொடங்கிவைத்தார். அந்த நிகழ்ச்சியை முடித்து டெல்லி செல்லும்போதே நிதியமைச்சர் மயிலாப்பூர் சந்தையில் காய்கறி வாங்கினார். நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பிவரும் நிலையில் பணவீக்கத்தை 4%க்கும் கீழ் குறைக்க மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று நிர்மலா சீதாராமன் கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த வீடியோ தொடர்பாக நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
V_JOSHI: நிர்மலா சீதாரமன் முதல் முறையாக எதையும் விற்பனை செய்யாமல் வாங்குகிறார்
Sathya @ Sathiyaseelan S: வரலாற்று தருணம்
The Long Term Investor: காய்கறிக்கு ஜிஎஸ்டியா?
Digital Nomad: கூல் நம்ம ஏரியா
Arghadip Das: நிர்மலா சீதாராமனை இது போன்று முன்பு பார்த்தது இல்லை. உள்ளூர் மக்களுடன் அதிகம் உரையாடுங்கள். சாமானியர்களுடன் நெருங்கிப் பழகுங்கள்.
Gowrimanohar MK இது போன்ற staged dramas பண்ணும்போது பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கவும்.. தமிழக அரசு "மீண்டும் மஞ்சப்பை" அறிமுகப்படுத்தி இருக்குதுங்க அமைச்சரே.
எம்எல்ஏ வானதி சீனிவாசன்: சமூகத்தின் அடித்தட்டு மக்களுடனான தொடர்பு, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற பாஜகவின் சித்தாந்தத்தை இந்த செயல் பிரதிபலிக்கிறது. காய்கறிகள் வாங்க மயிலாப்பூர் சந்தைக்கு அவர் சென்றது பாஜக தலைவர்களின் எளிமையான அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது.