Published : 09 Oct 2022 12:32 PM
Last Updated : 09 Oct 2022 12:32 PM

விபத்து பிரிவில் சேவை செய்யும் பைக் ரேஸர்... மறுவாழ்வு மையத்தில் தொண்டாற்றும் ‘ரூட் தல’ - மக்களின் பாராட்டை பெற்ற மனிதநேய தீர்ப்புகள்

ரயிலில் சக பயணிகளிடம் கத்தியைக் காட்டி மிரட்டிய ‘ரூட் தல’, மறுவாழ்வு மையத்தில் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு சேவை புரிகிறார். அசுர வேகத்தில் சாகசம் காட்டி மிரள வைத்த பைக் ரேஸர்கள் நடுரோட்டில் நின்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தும், விபத்து தலைக் காயம் பிரிவில் தொண்டாற்றியும் வருகின்றனர்.

இப்படி, தவறு செய்யும் இளைஞர்கள் திருந்த வேண்டும் என்றஎண்ணத்தில் நூதன நிபந்தனைகளுடன் ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் வழங்கி வரும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் மனிதநேய தீர்ப்புகள் பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளன.

தீர்ப்புகளே தீர்வாகிவிடாது. ஆனால் தீர்ப்புகள் எப்போதும் சரியான தீர்வை நோக்கியதாக இருக்கவேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக சட்டத்தின் துணையுடன் தங்கள் தீர்ப்புகளின் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா.

பைக் ரேஸ் இளைஞர்கள்: சென்னை ஸ்டான்லி மருத்துவமனை ரவுண்டானாவில் இருந்துமூலக்கொத்தளம் வரை கடந்தமார்ச் 20-ம் தேதி சில இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டதாக வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து ப்ரவீன் (21) என்பவர் உட்பட 4 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் கைதான ப்ரவீன், தனக்கு ஜாமீன் கோரிய மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ‘‘ஜாமீன் கோரியுள்ள ப்ரவீன், ஒரு மாதம் ஸ்டான்லி மருத்துவமனையின் விபத்து மற்றும் தலைக் காயம் பிரிவில் காலை 8 மணி முதல் 12 மணி வரை,

அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தொண்டாற்ற வேண்டும். அப்போதுதான் அங்கு உள்ளவர்கள் அனுபவிக்கும் வேதனையை நிதர்சனமாக உணர முடியும்’’ என உத்தரவிட்டார்.

‘ரூட் தல’ மாணவர்: ‘ரூட் தல‘ என்ற பெயரில் புறநகர் ரயிலில் படியில் தொங்கிக்கொண்டு, சக பயணிகளிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அலற வைத்தார் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர் குட்டி. அவர் மீது ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்ய, முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தை அவர் நாடினார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, அந்த மாணவரின் உயர் கல்வி பாழாகிவிடக் கூடாது என்ற எண்ணத்தில், சென்னையில் உள்ளமித்ரா என்ற மாற்றுத் திறன்குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான மறுவாழ்வு மையத்தில் 6 வாரங்களுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் சென்று சேவை புரிய வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கினார்.

அதன்படி அந்த மாணவர் தற்போது குழந்தைகளுக்கு சேவை புரிந்து வருகிறார்.

நடு ரோட்டில் சாகசம்: எந்நேரமும் பரபரப்பாக வாகனநெரிசலுடன் காணப்படும் தேனாம்பேட்டை - அண்ணா சாலையில், கடந்த செப்.9-ம் தேதி வாகன ஓட்டிகளை மிரள வைக்கும் வகையில் பைக் ரேஸர்கள் சிலர் நடுரோட்டில் சாகசத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, பாண்டிபஜார் போக்குவரத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து, 6 பேரை கைது செய்தனர்.

பைக் ரேஸில் ஈடுபட்ட ஹைதராபாத்தை சேர்ந்த அலெக்ஸ் பினோய் (22) என்ற வாலிபர், தனக்கு முன்ஜாமீன் கோரிய மனுவை விசாரித்த நீதிபதிஜெகதீஷ் சந்திரா, ‘‘அந்த இளைஞர் எந்த இடத்தில் சாகசத்தில் ஈடுபட்டாரோ, அதே ரோட்டில் 3 வாரங்களுக்கு திங்கள்கிழமை தோறும் காலை, மாலை வேளைகளில் தினமும் ஒரு மணி நேரத்துக்கு ‘இனி பைக் ரேஸில் ஈடுபடமாட்டேன்’, ‘சாலை விதிகளைக் கடைபிடிப்பேன்’ என்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பிரச்சாரம் மேற்கொள்ள உத்தரவிட்டார்.

விபத்து பிரிவில் உதவி: மற்ற நாட்களில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உதவியாக அவர் இருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, அந்த வாலிபர் தற்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

விழிப்புணர்வு பிரச்சாரம்: சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த திலீபன் என்ற வாலிபர், கடந்த ஆகஸ்ட் மாதம் மதுபோதையில் ஆட்டோ ஓட்டி, நடந்து சென்றவர்கள் மீது மோதி படுகாயம் ஏற்படுத்தியதாக அடையாறு போக்குவரத்து போலீஸார் அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி, திலீபன் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநரான திலீபன்2 வாரங்களுக்கு, அடையாறுஎல்.பி. சாலையில் உள்ள சிக்னலில், ‘குடித்து விட்டு வாகனம் ஓட்டாதீர்’ என்ற துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு காலை 9 முதல் 10 மணி வரையிலும், மாலை 5 முதல் 7 மணி வரையிலும் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்திருந்தார்.

தீர்ப்புகளின் நோக்கம்: இதுபோன்ற வித்தியாசமான தீர்ப்புகளின் நோக்கம், இளமையின் வேகத்தால், போதையின் தாக்கத்தால் தவறு செய்யும் இளைஞர்கள் மட்டுமின்றி, அதைப் பார்க்கும் மற்ற இளைஞர்களும் திருந்த வேண்டும் என்பதே. எனவே இதை தண்டனையாக கருதக் கூடாது.

இந்த தீர்ப்புகளின் மூலமாக சமூகத்தின் மீதான பார்வை மாறி, யாராவது மனம் திருந்தியிருந்தால் அதுவே மிகப்பெரிய மன திருப்தியை கொடுக்கும் என தங்களது உத்தரவின் மூலம் தெரிவிக்கின்றனர் இந்த நீதிபதிகள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x