

காஞ்சிபுரம் அருகே துலங்கும் தண்டலம் கிராமத்தில் காட்டுப் பன்றிகள் தொல்லையால் நெற்பயிர்கள் நாசமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும் காட்டுப் பன்றிகளின் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஆரிய பெரும்பாக்கம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட துலங்கும் தண்டலம் கிராமத்தில் சுமார் 150 ஏக்கருக்கு நெற்பயிர்கள், கடலை போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
அறுவடைக்கு 20 நாட்கள்: இந்தக் கிராமத்தில் விவசாயத்தையே முழுநேர தொழிலாக செய்துவரும் விவசாயிகள் காட்டுப்பன்றிகளின் தொல்லையால் விவசாயத் தொழிலை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இவர்கள் பயிரிட்டு அறுவடை செய்ய இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் காட்டுப் பன்றிகள் இரவு நேரங்களில் கூட்டமாக வந்து விவசாய நிலங்களில் இறங்கி நெற்பயிர்களை நாசம் செய்கின்றன.
ஏற்கெனவே விவசாய இடுபொருள்களின் விலை ஏற்றம், யூரியா கிடைக்காமல் கடும் தட்டுப்பாடு, கூலியாட்கள் கிடைக்காத நிலை போன்றவற்றால் அதிக செலவு செய்து விவசாயிகள் நெற்பயிர்களை பயிர் செய்துள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில் காட்டுப் பன்றிகள் தொல்லையால் அவர்கள் பெரும் இழப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்கின்றனர்.
விவசாயத்தை காப்பாற்ற காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
விவசாயத்தையே முழுநேர தொழிலாக செய்துவரும் விவசாயிகள் காட்டுப்பன்றிகள் தொல்லையால் விவசாயத் தொழிலை விட்டுவெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.