

சென்னை: நிர்பயா திட்டத்தின்கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆலோசனை மைய புதிய அலுவலக கட்டிடம் எழும்பூரில் கட்டப்பட்டுள்ளது. இதை சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால், நடிகை சாய் பல்லவி உட்பட பலர் கலந்து கொண்டனர். சென்னை, வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில், நிர்பயா பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆலோசனை மையம் செயல்பட்டு வந்தது. இங்கு, சமூக நல ஆலோசகர், சட்ட ரீதியான ஆலோசகர், குழந்தைகள் மன நல ஆலோசகர்கள் பணியாற்றுகின்றனர்.
இந்த மையத்தை, எழும்பூரில், காவல் மருத்துவமனை அருகே மாற்ற முடிவு செய்யப்பட்டது. அந்த இடத்தில்தான், முதன்முதலாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகம் செயல்பட்டது. தற்போது, அங்குள்ள புதிய கட்டிடத்துக்கு, நிர்பயா பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆலோசனை மையம் மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தை, சமூகநலத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன்நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு, காவல் ஆணையர் சங்கர்ஜிவால் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது: முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற 20-வது நாளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படிபல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான வழக்கில் உடனடியாக வழக்குப் பதிந்து, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காவல் துறையும், சமூக நலத்துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம். இந்த ஆலோசனை மையம் முதல்வரின் எண்ணத்துக்கு ஏற்ப செயல்பட்டு வருகிறது. பெண்கள் நலன் மற்றும் பாதுகாப்புக்காக இந்த மையம் செயல்படுகிறது என்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, நடிகை சாய்பல்லவி பங்கேற்று பேசியதாவது: இந்த மையம் துவங்கப்பட்டு, ஓராண்டு நிறைவு அடைந்துவிட்டது என்பதில் மகிழ்ச்சி. தினமும் இந்த மையத்தை, 500 பேராவது தொடர்பு கொள்கின்றனர். அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கும் ஆலோசகர்களின் பணி பாராட்டத்தக்கது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏதேனும் பாதிப்பு இருந்தால், கட்டாயம், 181 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் பிரச்சினைக்கு இங்கு தீர்வு காணப்படும் என்றார்.
508 வழக்குகள்: கடந்த ஓராண்டில் நிர்பயா பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆலோசனை மையத்தில் 412 வழக்குகள் அனைத்து மகளிர் காவல் நிலையம் மூலமாகவும், 80 வழக்குகள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு மூலமாகவும், 8 வழக்குகள் இதர அமைப்புகள் மூலமாக கிடைக்கப் பெற்று மொத்தம் 508 வழக்குகள் கையா ளப்பட்டுள்ளது. இதில் 8 சதவீதம் ஆண்களுக்கும் 92 சதவீதம் பெண்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.