

சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்கிறார். கடந்த 2015-ல் சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்துக்குப் பிறகு, மாநகரின் பல்வேறு பகுதிகளில் அரசு சார்பில் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு வந்தன. 5 ஆண்டுகளுக்கு மேல் மழைநீர் வடிகால்கள் அமைத்த பின்னரும், 2021-ல் பெய்த கனமழையால், வெள்ளம் சூழும் பகுதிகளின் எண்ணிக்கை உயர்ந்தது.
இதுதொடர்பாக ஆய்வு செய்யுமாறு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில், பல இடங்களில் மழைநீர் வடிகால்களை இணைக்காமல் விட்டிருந்ததும், சில இடங்களில் வடிகால் அமைக்காததும் தெரியவந்தது. இதையடுத்து, போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி சார்பில் `சிங்காரச் சென்னை 2.0' திட்டத்தின் பகுதி-1, 2-ன் கீழ் ரூ.277கோடியில் 60.83 கி.மீ. நீளத்துக்கும், வெள்ள நிவாரண நிதியின் கீழ் ரூ.295.73 கோடியில் 107.57 கி.மீ.நீளத்துக்கும், உட்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.27.21 கோடியில் 10 கி.மீ. நீளத்துக்கும், மூலதன நிதியின் கீழ் ரூ.8.26 கோடியில் 1.05 கி.மீ.நீளத்துக்கும் மாநகரின் பிரதான பகுதிகளில் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள்நடந்து வருகின்றன. இதில் 85 சதவீத பணிகள் முடிந்துவிட்டதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 4-வது வாரத்தில் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகளின் நிலையை அறிய முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். இன்று காலை 10.30 முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடக்கும் இந்த ஆய்வில், அசோக் நகர், கொளத்தூர், வேலன் நகர், கன்னிகாபுரத்தில் டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை,புளியந்தோப்பு நெடுஞ்சாலை, பட்டாளம் டிமெல்லோஸ் சாலை, பேசின் பாலம் சந்திப்பு, வால்டாக்ஸ் சாலை, ரிப்பன் மாளிகை, என்எஸ்சிபோஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வடிகால், தூர்வாரும்பணிகளை முதல்வர் ஆய்வு செய்யஉள்ளதாக தெரிகிறது.