ராஜராஜ சோழன் 1031-வது ஆண்டு சதய விழாவில் பெருவுடையாருக்கு பேரபிஷேகம்

ராஜராஜ சோழன் 1031-வது ஆண்டு சதய விழாவில் பெருவுடையாருக்கு பேரபிஷேகம்

Published on

தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் அரியணை ஏறியதன் 1031-வது ஆண்டு சதய விழாவை முன்னிட்டு, அவரது சிலைக்கு பெருவுடையாருக்கு பேரபிஷேகம் மற்றும் பெருந்தீப வழிபாடும், மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியும், நேற்று நடைபெற்றது.

தஞ்சை பெருவுடையார் கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1031-வது ஆண்டு சதய விழா நேற்று முன்தினம் தொடங்கியது. 2-ம் நாளான நேற்று காலை பெரிய கோயிலில் இருந்து யானை மீது திருமுறையை (தேவாரம், திருவாசகம்) ஊர் வலமாக எடுத்துச் சென்று, ராஜராஜன் சிலைக்கு ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

திருவேற்காடு அய்யப்ப சுவாமி, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜி ராஜா பான்ஸ்லே, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் சி.குமரதுரை, உதவி ஆணையர்கள் ஜெ.பரணிதரன், உமாதேவி, கலை பண்பாட்டுத் துறை துணை இயக்குநர் குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, திருமுறை ஓதுவார் திருமுறைப் பண்ணுடன் ராஜ வீதிகளில் ‘திருமுறை வீதியுலா’ நடைபெற்றது. தொடர்ந்து, மூலவர் பெருவுடையாருக்கு திரவிய பொடிகள், தேன், பால், பழங்கள், நெய், தயிர், மஞ்சள் உள்ளிட்ட 48 வகையான பொருட்களைக் கொண்டு பேரபிஷேம், பெருந்தீப வழிபாடு நடைபெற்றது.

மாலையில் தேவாரம், திருமுறை இசை அரங்கம், இன்னிசை பாட்டு மன்றம் போன்றவையும், வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது. இரவு பரத நாட்டிய நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது.

உடையாளூரில் சிறப்பு யாகம்

ராஜராஜ சோழனின் சமாதி உள்ளதாக நம்பப்படும், கும்பகோணத்தை அடுத்த உடையாளூர் கிராமத்தில் உள்ள சிவலிங்கத் திருமேனிக்கு சிறப்பு யாகங்கள், 16 வகையான அபிஷேகங்கள், அலங்காரங்கள் நடைபெற்றன. சோழர் கொடியேற்றமும், தொடர்ந்து அண்ணாமலை சித்தரின் தமிழ் மறை வேள்வியும் நடைபெற்றது. அதன்பின், மகா கலச அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு அன்னதானம் நடைபெற்றன.

விழாவில், சிதம்பரத்தை அடுத்த பிச்சாவரம் ஜமீன்தார்கள் சக்கர வர்த்தி சூரப்பசோழகர், வரலாற்று ஆர்வலர் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, அய்யப்ப சுவாமி, சி.பாபாஜி ராஜா பான்ஸ்லே உள்ளிட்டோர். (அடுத்த படம்) தஞ்சாவூர் பெரிய கோயிலில், மூலவர் பெருவுடையாருக்கு நேற்று நடைபெற்ற மஞ்சள் அபிஷேகம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in