Published : 08 Oct 2022 06:18 AM
Last Updated : 08 Oct 2022 06:18 AM

உங்கள் குரல்: சிதம்பரத்தில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

சிதம்பரம் மேலவீதியில் நடைபாதையை ஆக்கிரமித்து கடை வைக்கப்பட்டுள்ளது.

கடலூர்: சிதம்பரத்தில் நடைபாதைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. நகர் முழுவதும் போக்குவரத்து நெரிசலும் உள்ளது. ஆக்கிர மிப்புகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ' இந்து தமிழ் திசை'யின் 'உங்கள் குரல்' பகுதியில் வாசகர்கள் பலர் தெரிவித்து இருந்தனர்.

இதுகுறித்து 'இந்து தமிழ் திசை' சார்பில் விசாரித்த போது: சுற்றுலா நகரமான சிதம்பரத்தில் எப்போதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பலர் வியாபார நோக்கமாக சிதம்பரத்துக்கு வந்து செல்கின்றனர். இதனால் நகரப் பகுதி யில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். மேலவீதி, கீழவீதி, வடக்கு வீதி, தெற்கு வீதி உள்ளிட்ட நான்கு வீதிகளிலும் நடைபாதைகளில் கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதாவது கடையின் பெயர் பலகையை வைப்பது. கடையை பகுதியை நீட்டி நடைபாதையில் வைப்பது என ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

இதனால் கடைவீதி மற்றும் மார்க்கெட் பகுதிக்கு வரும் பொதுமக்கள் நடைபாதையில் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அதிக அளவில் விபத்துக்கள் நடக்கிறது. மேலும் நான்கு வீதிகள் மற்றும் நகரின் முக்கிய போக்குவரத்து பகுதிகளான பச்சையப்பன் பள்ளி தெரு, சபாநாயகர் தெரு, படித்துறை இறக்கம் பகுதி, எஸ்பி.கோயில் தெரு, சீர்காழிசாலை, மந்தகரை பகுதி, ஓமகுளம் பகுதி, மீன் மார்க்கெட் பகுதி உள்ளிட்ட இடங்களில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்படுகின்றன.

நகரில் உள்ள நடை பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், மேலும் போக்குவரத்து மிகுந்த இடங்களில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிதம்பரம் நகர மக்கள் பல ஆண்டுகளாக குரல் கொடுதது வருகின்றனர். இதுகுறித்து சிதம்பரம் நகராட்சி ஆணையர் அஜிதா பர்வின் கூறுகையில், "நடைபாதை ஆக்கிரமிப்புகள் உள்ளிட்ட அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தாறுமாறாக வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது காவல் துறை உதவியுடன் நடவடிக்கை எடுத்து, போக்குவரத்து நெரிசலை குறைக்க உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்படும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x