ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்துக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்  

ஆன்லைன் ரம்மி | பிரதிநிதித்துவப் படம்
ஆன்லைன் ரம்மி | பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையில் அரசு ஒரு குழுவை அமைத்தது. இக்குழு 27.06.2022 அன்று தனது அறிக்கையினை சமர்ப்பித்தது. இதன்பின், பள்ளி மாணவர்கள் மீது இணையவழி விளையாட்டுகள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பற்றி பள்ளிக் கல்வித் துறை வாயிலாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு, பொது மக்களிடம் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட கருத்துகள் மற்றும் கருத்துப் பகிர்வோர்களிடம் நடத்தப்பட்ட கலந்தாலோசனைக் கூட்டம் ஆகியவற்றின் மூலம் பெறப்பட்ட கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில், சட்டத்துறையின் ஆலோசனையுடன் ஒரு வரைவு அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு கடந்த 29.08.2022 அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து முழுமையான அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு, 26.09.2022 அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த அவசரச் சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் பெற அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஆன்லைன் ரம்மி தடையைச் செய்யும் அவரச சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த சட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இம்மாதம் 17-ம் தேதி தொடங்கவுள்ள தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு முழுமையான சட்டமாக நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in