

மேட்டூர் அணை திறக்கப்படாததால் காவிரி டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிர்கள் பல இடங்களில் நீரின்றி காயத் தொடங்கியுள்ளன. இந்த பயிர்களுக்குக் கைகொடுக்க வட கிழக்கு பருவமழை மட்டுமே சாத்தி யம் என்பதால், விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
தொடர்ந்து 5-வது ஆண்டாக இந்த ஆண்டும் நீர் இருப்பு இல்லா ததால் மேட்டூர் அணை கால தாமதமாகவே திறக்கப்பட்டது. இதனால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆற்றுப் பாசனத்தின் மூலம் சாகுபடி செய்யும் விவசாயிகள் நேரடி விதைப்பு மூலம் சாகுபடி செய்வதற்காக சிறப்பு தொகுப்புத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.
இதன்படி, தஞ்சாவூர் மாவட் டத்தில் 3.30 லட்சம் ஏக்கரில் சாகுபடிக்கு திட்டமிடப்பட்டு, இது வரை 2.40 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடைபெற்றுள்ளது. இதில், 63,500 ஏக்கர் நேரடி விதைப்பாகவும் மீதமுள்ள நிலத்தில் நடவும் செய் யப்பட்டுள்ளது. இன்னும் 90,000 ஏக்கரில் சாகுபடி செய்வதற்குத் தேவையான நாற்றுகளும் விடப்பட் டுள்ளன.
திருவாரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை சம்பா சாகுபடி இலக்கு 3,00,400 ஏக்கர். இதில், இதுவரை 2.25 லட்சம் ஏக்கரில் நேரடி விதைப்பாகவும், 73 ஆயிரம் ஏக்கரில் நடவு முறையிலும் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2.55 லட்சம் ஏக்கரில் சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில், இதுவரை 1.67 லட்சம் ஏக்கரில் நேரடி விதைப்பும், 42,500 ஏக்கரில் நடவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 40 ஆயிரம் ஏக்கரில் நடவு செய் வதற்கான நாற்றுகள் தயாரிக்கப் பட்டுள்ளன.
இந்நிலையில், மேட்டூர் அணை யில் நீர் இருப்பு குறைந்துகொண்டே வந்ததாலும், டெல்டா மாவட்டங் களில் ஆங்காங்கே மழை பெய்த தாலும் அணையில் இருந்து பாசனத் துக்குத் தண்ணீர் திறப்பு படிப்படி யாகக் குறைக்கப்பட்டது. தற்போது குடிநீர் ஆதாரங்களுக்காக மட்டும் விநாடிக்கு 2,500 கன அடி வீதம் திறக்கப்படுகிறது.
ஆனால், வடகிழக்கு பருவமழை நவம்பர் மாத தொடக்கத்தில் ஒரு சில இடங்களில் பெய்தது. அதன்பிறகு தற்போது இரவில் பனி அதிகரித்துள்ளதால் மழைப் பொழிவு முற்றாக நின்று விட்டது.
இதன் காரணமாக, நேரடி விதைப்பு செய்யப்பட்ட நெற்பயிர் கள் தற்போது மெல்ல காயத் தொடங்கிவிட்டன. மேட்டூர் அணை யின் நீர்மட்டம் 40 அடி அளவுக்கே உள்ளதால் இனி பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்படும் சூழல் இல்லை.
வடகிழக்கு பருவமழை மீண்டும் நவம்பர் 14-ம் தேதி தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை மட்டுமே இந்த பயிர்களைக் காக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால், இந்த ஆண்டும் சம்பா சாகுபடியில் செலவு செய்த தொகை கூட கிடைக்குமா என்ற சந்தேகத்தில் டெல்டா விவசாயிகள் உள்ளனர்.
இதுகுறித்து, காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஆறுபாதி கல்யாணம் கூறியபோது, “கர் நாடகா தண்ணீர் தராததாலும், வடகிழக்கு பருவமழை உரிய காலத்தில் தொடங்காததாலும் டெல்டா விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இதனால், சாகுபடிக்கு செலவு செய்த பணமாவது திரும்பக் கிடைக்குமா என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர். தொடர் வறட்சி காரணமாக விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் நிலைகுலைந்து உள்ளது.
தமிழகத்தை, குறிப்பாக டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து, உரிய நிவாரண உதவிகளை விவசாயிகளுக்கு வழங்க அரசு முன்வர வேண்டும் என்றார்.