பணிநீக்கம் செய்யப்பட்ட சுங்கச்சாவடித் தொழிலாளர்களுக்கு பதிலாக வடமாநிலத் தொழிலாளர்கள்: சீமான் கண்டனம்

சீமான் | கோப்புப்படம்
சீமான் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: "பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் சுங்கச்சாவடித் தொழிலாளர்களை விதிகளுக்கு மாறாக, நீக்கி அறிவித்துவிட்டு, அவர்களுக்குப் பதிலாக வடமாநிலத் தொழிலாளர்களைப் பணியமர்த்த முனைவதென்பது கடும் கண்டனத்திற்குரியது" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "உளுந்தூர்பேட்டையிலுள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடி, பெரம்பலூரிலுள்ள திருமாந்துறை தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி ஆகியவற்றில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் 54 பேரை தான்தோன்றித்தனமாக பணிநீக்கம் செய்திருக்கும் சுங்கச்சாவடி நிர்வாகத்தின் நடவடிக்கை அப்பட்டமான விதிமீறலாகும்.

பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் அத்தொழிலாளர்களை விதிகளுக்கு மாறாக, நீக்கி அறிவித்துவிட்டு, அவர்களுக்குப் பதிலாக வடமாநிலத் தொழிலாளர்களைப் பணியமர்த்த முனைவதென்பது கடும் கண்டனத்திற்குரியது.

சாலையில் பயணிக்கக் குடிமக்களிடம் வரிவசூலிக்கும் சுங்கச்சாவடி எனும் கட்டமைப்பையே நாம் ஏற்கவில்லையென்றாலும், தொழிலாளர் விதிகளுக்கு மாறாக நிகழ்த்தப்பட்டுள்ள சுங்கச்சாவடி ஊழியர்களின் வேலைபறிப்பு என்பது ஏற்புடையதல்ல.

தங்களது பதவிநீக்கத்தை ரத்துசெய்து, பணிநிரந்தரம் செய்யக்கோரும் சுங்கச்சாவடி தொழிலாளர்களது கோரிக்கையும், அதனை வலியுறுத்திய அறப்போராட்டமும் மிக நியாயமானது.

ஆகவே, ஆளும் வர்க்கம் அவர்களது கோரிக்கைக்குச் செவிசாய்த்து, உடனடியாக அதனை நிறைவேற்றித் தர வேண்டுமென வலியுறுத்துவதோடு, அத்தொழிலாளர்களின் போராட்டம் வெற்றிபெற நாம் தமிழர் கட்சி துணைநிற்குமென உறுதியளிக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in