“திருப்பூர் காப்பகம் மூடல்; நிர்வாகி மீது குற்ற நடவடிக்கை” - நேரில் ஆய்வு செய்த அமைச்சர் கீதா ஜீவன்

அமைச்சர் கீதா ஜீவன்
அமைச்சர் கீதா ஜீவன்
Updated on
1 min read

திருப்பூர்: "திருப்பூர் தனியார் காப்பகத்தின் அஜாக்கிரதையாலும், மெத்தனப்போக்கினாலும், குழந்தைகள் மீது சரியாக கவனம் செலுத்தாத காரணத்தினாலும்தான் குழந்தைகள் இறப்பு ஏற்பட்டிருக்கிறது. காப்பகத்தை மூடவும், நிர்வாகி மீது சட்டப்படி குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் தமிழக சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் குழந்தைகள் காப்பகத்தில் தமிழக சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் இன்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "குழந்தைகள் இறந்த அந்தக் காப்பகத்தை பார்த்தேன். உண்மையில், குழந்தைகளுக்கான ஓய்வு அறை போலவே இல்லை அந்த இடம். ஒரு பாதுகாப்பற்ற முறையில் இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு நூறு மீட்டருக்கு பிறகுதான், கழிவறை உள்ளது. இரவில் கழிவறை செல்ல முடியாமல், அந்தக் குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அந்தக் குழந்தைகளுடன் இரவு எந்தக் காப்பாளரும் தங்கியிருக்கவில்லை. யாராவது அங்கு தங்கியிருந்தால், குழந்தைகள் தங்களது பிரச்சினைகளை கூறியிருப்பார்கள். ஏதாவது செய்திருக்கலாம். ஒருவர் தங்கியிருக்கிறார். ஆனால், அவர் காப்பாளர் இல்லை என்று அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காப்பகத்தின் அஜாக்கிரதையாலும், மெத்தனப்போக்கினாலும், குழந்தைகள் மீது சரியாக கவனம் செலுத்தாத காரணத்தினாலும்தான் குழந்தைகள் இறப்பு ஏற்பட்டிருக்கிறது. இது நேரில் ஆய்வு செய்தபோது கண்கூடாகத் தெரிகிறது.

இந்தக் காப்பக நிர்வாகம் மெத்தனப்போக்குடன் செயல்பட்டு வந்ததால், குழந்தைகள் இறப்பு நிகழ்ந்திருக்கிறது. எனவே இந்தக் காப்பகம் மூடப்படுகிறது. இந்தக் காப்பகத்தில் உள்ள குழந்தைகள் ஈரோட்டில் உள்ள அரசு இல்லத்துக்கு மாற்றுவது தொடர்பாக குழந்தைகள் நலக் குழு ஆலோசனையின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுக சார்பில் நிவாரணத் தொகை அளிக்கப்பட்டிருக்கிறது. அரசு சார்பில், நிவாரணம் வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அதற்கான முன்மொழிவினை அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். நிவாரணம் குறித்து முதல்வர் அறிவிப்பார். சம்பந்தப்பட்ட காப்பகத்தின் நிர்வாகியின் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

திருப்பூர் அவிநாசி சாலை திருமுருகன்பூண்டியில் செயல்பட்டு வரும் ஸ்ரீவிவேகானந்த சேவாலயம் ஆதரவு ஏற்போர் குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவைச் சாப்பிட்ட 3 சிறுவர்கள் உயிரிழந்தனர். மேலும், 11 சிறுவர்கள் உட்பட 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். செந்தில்நாதன் என்பவர் இந்தக் காப்பகத்தை நிர்வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது. | விரிவாக வாசிக்க > திருப்பூர் தனியார் காப்பகத்தில் கெட்டுப்போன உணவால் 3 குழந்தை உயிரிழப்பு - 11 சிறுவர்கள் உட்பட 12 பேருக்கு சிகிச்சை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in