

சேலம்: விபரீதத்தை விளைவிக்கும் ஆன்-லைன் விளையாட்டுகளால் குழந்தைகள் பாதிக்கப்படாமல் தடுக்க, அவர்களது மன ஆரோக்கியத்தை செம்மைப்படுத்துவது பெற்றோரின் கடமை என சேலம் மனநலமருத்துவர் மோகன வெங்கடாஜலபதி ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: செல்போன்களில் வசீகரிக்கும் ‘டிக்-டாக்’ காட்சிகளும், விடியவிடிய விளையாடி சலிப்படையவைக்காத பப்ஜி போன்ற விளையாட்டுகளும் இளைஞர்களை பெரும் மனபாதிப்புக்கு வழி வகை அமைத்துக் கொடுத்துள்ளது. ‘பப்ஜி, டிக்-டாக்’ உள்ளிட்டவைகளை தடை செய்தாலும், இந்தசெயலி மறுஉருவெடுத்து, வேறுவடிவில், மாற்று பெயர்களில் இணையதளங்களில் உலவி வருவதை மறுக்க முடியாது. மூளையைதூண்டி விட்டு, நாடி நரம்புகளை கட்டுக்கடங்காத உணர்ச்சிகளை தூண்டி விட்டு, ரத்த நாளங்களை சூடேற்றி, கொதிப்பு நிலைக்கு தள்ளும் விபரீத விளையாட்டில் இளைஞர்கள் மூழ்கி, வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர்.
கேமிங் அடிக் ஷன்: இதுபோன்ற ‘கேமிங் அடிக் ஷன்’ நிலைக்கு உள்ளானவர்களை, மதுக்கு அடிமையானவர்களின் உடல் நிலைக்கு ஒப்பானவர்களாக கொண்டே, மனநல மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். தங்களுக்கு மிகவும் பிடித்தமான குறிப்பிட்ட செயலை தொடர்ந்து செய்துகொண்டிருப்பவர்களின் மூளையில்‘டோப்பமின்’ என்ற வேதிப்பொருள் சுரக்கும். இந்த வேதிப்பொருளானது, ஆரம்பத்தில் குறிப்பிட்ட நேரத்தில் விளையாட தூண்டிவிடும். நாளடைவில் மணிக்கணக்கில் விளையாட மூளை கட்டளையிடுவதை, மனம் லயித்து, சுயத்தைஇழந்து, தன்னிலை மறக்கடிக்கும்.
குழந்தைகள் ‘கேமிங் அடிக் ஷன்’களாக மாறுவதற்கு பெற்றோரே முழு காரணம். தாய், தந்தை இருவரும் செல்போன்களில் மூழ்கிவிடும்போது, அதை குழந்தைபருவத்தில் இருந்து காணும் குழந்தைகள் சற்று விவரம் தெரிந்தவுடன், செல்போன்களை கேட்டு அடம் பிடித்து வாங்கி வைத்துக் கொள்கின்றனர். தங்களை தொல்லை கொடுக்காமல் இருந்தால் போதும் என்ற எண்ணத்தில், பெற்றோரும் குழந்தைகளுக்கு செல்போன் வாங்கி கொடுத்து, அவர்களை கண்காணிக்க தவறிவிடுகின்றனர். குழந்தைகளிடம் செல்போன்இல்லாத போது, தனக்கு தானே பேசி, கை, கால்களை அசைத்தபடி, தான் விளையாடிய விளையாட்டை மனம் பேதலித்து இருக்கும்போது தான், பெற்றோர் விபரீதத்தின் உச்சத்தை உணர்கின்றனர்.
தனிமையில் இருக்கும் குழந்தைகள், வீடு அருகில் நண்பர்கள் இல்லாதது, பெற்றோரின் அன்பு, அரவணைப்பு கிடைக்காதவர்களுக்கு முதலில் ஆறுதலாக செல்போன்கள் அறிமுகமாகின்றன. அதில் உள்ள நல்ல விஷயங்கள் கொஞ்சமாகவும், கெட்ட விஷயங்கள் விஸ்வரூபம் எடுத்து மனதைஆக்கிரமிக்கும். கைப்பந்து, கால்பந்து, கிரிக்கெட், பூப்பந்து, வளைபந்து, கண்ணாமூச்சி என உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் கலாச்சார விளையாட்டுகள், யாரையும் அடிமைப்படுத்தவில்லை.
ஆனால், செல்போன் மூலம் இணையவழி விளையாட்டுகள் மூளையை செயல் இழக்கச் செய்து, அந்த விளையாட்டுகளில் மூழ்கடித்து, சிந்தனையை சிறையிலிட்டுவிடுகிறது. எப்போதும் தனிமையில் விடப்படும் குழந்தைகள், ஏதோ ஒரு விதத்தில் வாழ்க்கையின் சோகத்துக்கு தள்ளப்படுவர் என்பது உறுதி.
பெற்றோரின் கையில்: பெற்றோர் குழந்தைகளை அவ்வப்போது வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று, உலகளாவிய அறிவை வளர்த்து விட வேண்டும். செல்போனில் அதிக நேரம் பொழுதை கழிக்கின்றனரா என கூர்ந்து கவனித்து, அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். தேவையான நேரங்களில் மட்டுமே பெற்றோர் செல்போன் பயன்படுத்தும் போது, குழந்தைகளும் தங்களை தகவமைத்துக் கொண்டு, செல்போன் பயன்பாட்டை உணர்வார்கள். குழந்தைகளின் எதிர்காலம் பெற்றோரின் கனிவான கண்காணிப்பிலும், அன்பு செலுத்தி அரவணைத்து செல்வதிலும், ஆசானாய் இருந்துஅவர்களை நல்வழிப்படுத்துவதிலும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.