

கோவை: ஆன்மிகத்துக்கும், நெசவாளர்களுக்கும் தொடர்பு இல்லை என கத்தி போடும் விழா குறித்து தேசிய கைத்தறி பயிற்சியாளர் காரப்பன் விமர்சனம் செய்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி தினத்தன்று, தெலுங்கு பேசும் தேவாங்க செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள், கோவை நகர்மண்டபம் அருகே,ராஜவீதியில் உள்ள ஸ்ரீ ராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோயிலைநோக்கி கத்தி போடும் திருவிழாவை நடத்தி வருகின்றனர். அதன்படி, நேற்று முன்தினமும் அவர்கள் கத்தி போடும் திருவிழாவை நடத்தினர்.
கத்தியால் வெட்டியதில், கையில் ரத்தம் சொட்ட முழக்கங்களை எழுப்பியபடி ராமலிங்க செளடாம்பிகை அம்மன்கோயிலுக்கு வந்து அம்மனை வழிபட்டுச் சென்றனர். இந்நிலையில், கத்தி போடும் திருவிழா குறித்து கோவை சிறுமுகையைச் சேர்ந்த தேசிய கைத்தறி பயிற்சியாளர் காரப்பன் கூறியதாவது:
துறைசார்ந்த விழாவாக: கத்தி போடும் விழாவில் பங்கேற்பதால் நெசவுத் தொழிலாளர்களின் வாழ்க்கை எவ்வாறு உயரும். ரத்தம் சொட்ட கத்தியால் கையில் வெட்டிக் கொள்கின்றனர். இதனால் மறுநாள் அவர்கள் சென்று தறி ஓட்ட முடியுமா? கையில் வெட்டியதால் காயம் ஏற்பட்டு, அவர்கள் சில நாட்கள் பணி செய்ய முடியாது. இதுபோன்றவற்றை தவிர்த்து, வருமானத்தை ஈட்டவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் துறைசார்ந்த விழாவாக நடத்தலாம். பாரம்பரியம் என்பது முடிந்துபோன விஷயம். தொழில் ரீதியான கலாச்சாரம், பகுத்தறிவு சிந்தனையோடு இருந்தால் தான் எந்தத் துறையும் வளரும். கத்தி போடும் நிகழ்வு நடத்தக்கூடாது என்பது என் கருத்து.ஆன்மிகத்துக்கும், நெசவாளர்களுக்கும் தொடர்பே இல்லை. எனவே, இதுபோன்ற நாட்களில் தொழில் ரீதியிலான நிகழ்வுகளை நடத்தலாம்’’ என்றார்.
கோயில் தர்மகர்த்தா கருத்து: இதுகுறித்து ஸ்ரீ ராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோயில் தர்மகர்த்தா மோகன்குமார் கூறும்போது, ‘‘விஜயதசமி தினத்தன்று கத்தி போடுவது வருடத்துக்கு ஒருமுறை செய்யக்கூடிய ஒரு வைபவம். கத்தி போடுவது அவர்களின் தனிப்பட்ட உரிமை. இது அவர்களின் நம்பிக்கை. கோவை மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இந்நிகழ்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. கத்தி போடும் விழா தொடர்பாக காரப்பன் கூறியது அவரது சொந்த கருத்து’’ என்றார்.