Published : 07 Oct 2022 04:05 AM
Last Updated : 07 Oct 2022 04:05 AM

பணிகள் முடிந்து ஓர் ஆண்டுக்கு மேல் ஆகியும் திறக்கப்படாத வால்பாறை படகு இல்லம்

பொள்ளாச்சி

வால்பாறையில் புதிதாக அமைக்கப்பட்ட படகு இல்லத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என, சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளை கவர நகராட்சி சார்பில், ரூ.5.6 கோடி மதிப்பில் தாவரவியல் பூங்கா மற்றும் ரூ.4.75 கோடி மதிப்பில் படகு இல்லம் அமைக்கப்பட்டது.

பணிகள் முற்றிலும் முடிவடைந்த நிலையில், கடந்த 22-ம் தேதி தாவரவியல் பூங்கா திறக்கப்பட்டது. படகு இல்லம் அமைக்கும் பணிகள் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிக்கப்பட்டு, படகு சவாரிக்காக படகுகள் வரவழைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

படகு சவாரி செய்பவர்களுக்காக பாதுகாப்பு வளையங்கள், பாதுகாப்பு கவச உடைகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால்்பணி முடிந்து ஓர் ஆண்டுக்கு மேல் ஆகியும் படகு இல்லம் திறக்கப்படாமல் உள்ளது.

இதுகுறித்து வால்பாறையை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது,‘‘படகு இல்லம் திறக்கப்படாமல் உள்ளதால் மக்களின் வரிப் பணம் வீணாகி வருகிறது. மேலும் படகு இல்லம் குப்பை கொட்டும் இடமாக மாறி வருகின்றது.

தற்போது தொடர் விடுமுறை மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் வால்பாறையில் நிலவும்இதமான காலநிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இங்கு பிற பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். படகு இல்லத்தை விரைவில் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்” என்றனர்.

வால்பாறை நகராட்சி அதிகாரிகள் கூறும்போது,‘‘படகு இல்லத்தில்இன்னும் சில பணிகள் முடிவடையாமல் உள்ளன. பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் படகு இல்லம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x