

மினி பஸ் மோதி கையில் நிரந்தர பாதிப்பு ஏற்பட்ட இளைஞருக்கு ரூ.25.62 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மினி பஸ் ஓட்டுநர், உரிமையாளர், காப்பீட்டு நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (22). இவர் தனது இருசக்கர வாகனத்தில் கோவை-பொள்ளாச்சி சாலையில் சுந்தராபுரம் அருகே 2020 நவம்பர் 7-ம் தேதி சென்றபோது, அதே திசையில் கோவை குறிச்சி பகுதியைச் சேர்ந்த முருகன் ஓட்டிவந்த மினி பஸ் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் மணிகண்டனுக்கு கையில் நிரந்தர பாதிப்பு ஏற்பட்டது. விபத்து நடந்தபோது மணிகண்டன் எலக்ட்ரீசியன் வேலை செய்து மாதம் ரூ.25 ஆயிரம் வருவாய் ஈட்டி வந்துள்ளார்.
எனவே, விபத்தால் தனக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு, பாதிப்புகளுக்கு மினி பஸ் ஓட்டுநர், உரிமையாளர் இழப்பீடு வழங்கக்கோரி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் மணிகண்டன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.சுரேஷ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மினி பஸ் ஓட்டுநரின் அதிவேகம், அஜாக்கிரதை, கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்தபோது மினி பஸ் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
விபத்தால் மனுதாரரின் வலது கையில் எலும்பு முறிவு, கையில் சதை இழப்பு ஏற்பட்டுள்ளது. அவரின் கையை இயக்குவதில் 58 சதவீதம் நிரந்தர ஊனம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ குழுமம் சான்றளித்துள்ளது.
மனுதாரரால் தொடர்ந்து எலக்ட்ரீசியன், பிளம்பர் வேலையை செய்ய இயலாது. அவருக்கு ஏற்பட்ட நிரந்தர ஊனம் வருவாயை இழக்கச் செய்யும்.
எனவே, மனுதாரருக்கு ஏற்பட்ட வலி, வேதனை, மருத்துவ செலவு, நிரந்தர வருவாய் இழப்பு, திருமண வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்பு ஆகியவற்றுக்கு இழப்பீடாக மொத்தம் ரூ.25.62 லட்சத்தை 7.50 சதவீத வட்டியுடன் வாகன ஓட்டுநர், உரிமையாளர், காப்பீட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.