

நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி கோத்தகிரி பேரகணி கிராமத்தில் தொடங்கியது.
நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். படுகர் இன மக்கள், தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரி ‘நம்ம நீலகிரி, நம்ம தேசம்' அமைப்பின் சார்பில் கோத்தகிரி பேரகணியிலிருந்து நடைபயணம் தொடங்கியது.
நடைபயணத்துக்கு முன்னாள் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சென்னமல்லன் தலைமை வகித்தார். பேரகணி பகுதியின் ஊர் நிர்வாகிகள் மணி, ராமன், பெள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சுந்தரமூர்த்தி, மஞ்சை.வி.மோகன், பேட்லாட சந்திரன் ஆகியோர் நடைபயணத்தின் போது சுற்று வட்டாரத்தில் உள்ள படுகர் இன மக்கள் வசிக்கும் கிராமங்களுக்குச் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நேற்று இக்குழுவினர் மீக்கேரி, பி.மணியட்டி, சி.மணியட்டி பாலகொலா, முதுகுலா ஆகிய கிராமங்களில் விழிப்புணர்வு நடைபயணத்தை தொடர்ந்தனர். நடைபயண நிகழ்ச்சியில் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.