விவசாயிகளின் தற்கொலையை அரசு அலட்சியப்படுத்தக் கூடாது: முத்தரசன்

விவசாயிகளின் தற்கொலையை அரசு அலட்சியப்படுத்தக் கூடாது: முத்தரசன்
Updated on
1 min read

விவசாயிகளின் தற்கொலையை அரசு அலட்சியப்படுத்தக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தஞ்சை, திருவாரூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் வேளாண் தொழில் வரலாறு கண்டிராத முறையில் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி கர்நாடகம் தமிழகத்திற்குரிய தண்ணீரை தருவதற்கு பிடிவாதமாக மறுத்து வருகின்றது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டாலும் ஏற்க மாட்டோம் என நிராகரித்து வருகின்றது. நடுநிலையோடு செயல்பட வேண்டிய நடுவண் அரசு, கர்நாடகத்திற்கு ஆதரவாக ஒரு தலைபட்சமாக செயல்பட்டு தவறான முன் உதாரணத்தை மேற்கொள்கிறது.

இயற்கையும் ஒத்துழைக்காத நிலையில், காவிரி பாசன மாவட்டங்களில் இவ்வாண்டு ஒருபோக சம்பா சாகுபடியும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு, விவசாயத் தொழில் ஒன்றை மட்டுமே நம்பியுள்ள லட்சக்கணக்காண விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் கடுமையான நெருக்கடிக்குள்ளாகி வாழ்க்கை மீது நம்பிக்கை இழந்துள்ளனர்.

இதன் விளைவாக திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் தனது வயலில் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம், ஆதிச்சபுரம் கிராமத்தை சோந்த குத்தகை விவசாயி அழகேசன், தான் சாகுபடி செய்த நிலத்திலேயே, விதைநெல் முளைக்காதது கண்டு அதிர்ச்சியடைந்து மரணமடைந்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள கீழத்திருப்பந்துருத்தி, கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜேஷ்கண்ணா தனது 3 ஏக்கர் வயலில் தெளித்த விதைநெல் முளைக்காத காரணத்தால், கூலி வேலைக்கு சென்ற இடத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமுற்றுள்ளார்.

விவசாய நெருக்கடியால் குடும்பத் தலைவர்களை இழந்து தவிக்கும் விவசாயிகள் குடும்பத்தினருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. காவிரி பாசன மாவட்டங்களில் தற்கொலை, அதிர்ச்சி மரணங்கள் தொடர்வது மிகுந்த கவலையளிப்பதாகும்.

மத்திய, மாநில அரசுகள், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளை போர்க்கால வேகத்தில் மேற்கொண்டு அகால மரணங்களை தடுத்து நிறுத்திட வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 25 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in