Published : 07 Oct 2022 06:57 AM
Last Updated : 07 Oct 2022 06:57 AM

புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை மத்திய அரசிடம் அளிக்கும் வரை எந்த பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது: சிப்காட் நிறுவனத்துக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுக்கா, மணலூரைச் சேர்ந்தடி.ரஞ்சித்குமார், எஸ்.ஜெகன்குமார் ஆகியோர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் கடந்த 2020-ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: சிப்காட் சார்பில் அமைக்கப்படும் தொழில் பூங்கா பழவேற்காடு ஏரிபறவைகள் சரணாலயத்தில் இருந்து சுமார் 5.5 கிமீ தொலைவில் உள்ளது. பழவேற்காடு ஏரி இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள 2-வது பெரிய உவர் நீர் சூழலியல் பகுதியாகும். இங்கு அதிக அளவிலான அரிய வகை பறவைகள் வாழ்கின்றன. இப்பகுதி எளிதில் சூழலியல் தாக்கத்துக்கு உள்ளாகக்கூடிய பகுதியாக கடந்த 2015-ம்ஆண்டு மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி இந்த ஏரியிலிருந்து 10 கிமீ சுற்றளவில் மாசுபடுத்தக்கூடிய தொழிற்சாலைகளை அமைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பகுதியில் ரூ.250 கோடியில் 691 ஏக்கர் பரப்பில் சிப்காட் சார்பில் தொழில் பூங்காவை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு கடந்த 2020-ம்ஆண்டு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் சுற்றுச்சூழல் அனுமதியும் பெற்றுள்ளது. அதைப் பெறுவதற்கான விண்ணப்பத்தில், தொழில் பூங்கா அமைய உள்ள இடம், பழவேற்காடு பறவைகள் சரணாலய பகுதியிலிருந்து 5.5 கிமீ தொலைவில் உள்ளது என்ற விவரம் இடம்பெறவில்லை.

மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும்போது, சூழலியல் எளிதில் பாதிக்கக்கூடிய இப்பகுதியில் சிவப்பு வகை தொழிற்சாலைகளை அமைக்கக் கூடாது என்ற கோணத்தில் பரிசீலிக்கவில்லை. எனவே தொழில் பூங்கா அமைக்க வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பை அமர்வின் நீதித்துறை உறுப்பினர் கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் கடந்த வாரம் வழங்கினர். அந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: பசுமை தீர்ப்பாய அறிவுறுத்தல் படி ஆய்வு மேற்கொண்டு முடிக்கும் வரை சிப்காட் நிறுவனத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதி நிறுத்தி வைக்கப்படுகிறது.

சிப்காட் நிறுவனம் தொழில் பூங்கா அமைக்க உள்ள இடத்திலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ள கிராமங்கள், அப்பகுதியில் உள்ள நிலங்களின் வகைப்பாடு, வேளாண் நிலம்இருந்தால் அப்பகுதிகளில் ஏற்படும் தாக்கங்கள், காற்று மாசு மதிப்பீடு உள்ளிட்ட ஆய்வுகளை மேற்கொண்டு புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையைத் தயாரிக்க வேண்டும். இவற்றின் அடிப்படையில் இறுதி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையைமத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அளிக்க வேண்டும். அதுவரை சிப்காட் நிறுவனம், திட்டப் பகுதியில் எந்த பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x