

ஆம்பூரில் வாடிக்கையாளர்களின் கோரிக்கைக்கு ஏற்ப குறைந்த கட்டணத்தில் ஆட்டோ சேவை தொடங்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகர் பகுதியை யொட்டியுள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று வர போதிய பேருந்து வசதி இல்லாததால் பெரும்பாலானோர் ஆட்டோக்களை நம்பியிருந்தனர்.
மேலும், வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்கள் குறைந்த கட்டணத்தில் இயங்கக்கூடிய ஆட்டோ சேவை ஆம்பூரில் தொடங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் இருந்து ஆம்பூர் முக்கிய பகுதிகளுக்கு ரூ.20 கட்டணத்தில் ஆட்டோ சேவை தொடங்கப் பட்டது. இதற்கான தொடக்க விழா ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், வீரத்துறவி விவேகானந்தர் ஆட்டோ ஓட்டுநர் நல சங்கத்தின் தலைவர் ஆர்.எஸ்.குமார் தலைமை வகித்தார். செயலாளர் கே.கோபி வரவேற்றார்.
கவுரவத் தலைவர்கள் பி.கே.மாணிக்கம், இ.சுரேஷ்பாபு, எம்.அன்பு, ஜெ.மேகநாதன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குறைந்த கட்டணத்தில் இயங்கக்கூடிய ஆட்டோ சேவையை தொடங்கி வைத்தனர்.
குறைந்த கட்டணம் ரூ.20-ல் இயங்கக்கூடிய ஆட்டோவானது ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் இருந்து ஆம்பூர் பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, ஆம்பூர் பஜார் பகுதி, மந்தகரை, சோமலாபுரம் சாலை, கன்னிகாபுரம் வழியாக வட்டாட்சியர் அலுவலகம் என பல்வேறு இடங்களுக்கு ரூ.20-ல் தனது சேவையை தொடரும் என ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஆம்பூரில் குறைந்த கட்டணத்தில் இயக்கப்படும் ஆட்டோ சேவைக்கு பொதுமக்கள் தரப்பில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதேநேரத்தில் வெளியூர்களில் இருந்து வியாபாரம், தொழில் போன்றவற்றுக்காக வரும் வியாபாரிகளும் குறைந்த கட்டண ஆட்டோ சேவை ஆம்பூர் முழுவதும் விரிவுப் படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்க நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, ஜெயகுமார், கிருஷ்ணமூர்த்தி, நகராட்சி கவுன்சிலர்கள், தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கத்தின் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகள் சம்பத், ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.