

மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை திரும்பியது. இடிக்கப் பட்ட கட்டிடத்தை மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்துச் செல்கின்றனர்.
சென்னை போரூர் அடுத்த மவுலி வாக்கத்தில் தனியார் கட்டுமான நிறுவனம் தலா 11 தளங்கள் கொண்ட 2 அடுக்குமாடி கட்டிடங்களை கட்டியது. இதில் ஒன்று கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் 61 பேர் இறந்தனர். 27 பேர் காயமடைந்தனர். அருகில் இருந்த மற்றொரு 11 மாடி கட்டிடமும் பாதுகாப்பற்ற நிலையில் இருப்ப தாக கண்டறியப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அந்தக் கட்டிடம் நேற்று முன்தினம் மாலை வெடி வைத்து தரைமட்டமாக்கப் பட்டது.
முன்னதாக, அக்கட்டிடத்தைச் சுற்றிலும் 100 மீட்டர் தொலைவில் உள்ள கட்டிடங்களில் வசித்தவர் களை மாவட்ட நிர்வாகம் வெளி யேற்றி திருமண மண்டபத்தில் தங்க வைத்தது. கட்டிடம் இடிக்கப்பட்ட தும் அடுத்த ஒரு மணி நேரத்தில், அவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். நிறுத்தப்பட்ட வாகன போக்குவரத்தும் தொடங்கியது. இதனால், நேற்று முன்தினம் பகல் 2 முதல் இரவு 7 மணி வரை வெறிச் சோடிய மவுலிவாக்கம், அதன்பின் சகஜ நிலைக்கு திரும்பியது.
முதல் கட்டிடம் இடிந்து விழுந்த பிறகு கடந்த 28 மாதங்களுக்கு மேலாக அச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருந்த ராஜராஜன் நகர் மக்கள், தற்போது நிம்மதி அடைந் துள்ளனர். ராஜராஜன் நகர் 2-வது தெருவைச் சேர்ந்த விஜயலட்சுமி கூறும்போது, ‘‘கடந்த 20 ஆண்டு களுக்கும் மேலாக இப்பகுதியில் வசித்து வருகிறோம். முதல் கட்டிடம் இடிந்து விழுந்தபோது, முதல் தெருவில் கட்டிடத்தின் பின்புறம் இருந்த வீடுகள் பாதிக்கப்பட்டன. அதன்பின் 2 வது கட்டிடம் எப்போது இடிக்கப்படும் என நாங்கள் காத் திருந்தோம். தற்போது அது பாது காப்பாக இடிக்கப்பட்டுள்ளதால் நிம்மதி அடைந்துள்ளோம். கட்டி டம் இடிக்கப்பட்டதால் எங்கள் வீடுகளுக்கு பாதிப்பில்லை. ஒரு வீட்டில் கண்ணாடி மட்டுமே உடைந்துள்ளது’’ என்றார்.
இடிக்கப்பட்ட கட்டிடத்தில் இருந்து சிதறிய சிமென்ட் காரை, சிமென்ட் துகள்கள் ராஜராஜன் நகர் முதல் தெருவில் உள்ள வீடுகளில் அதிகளவில் கொட்டிக் கிடந்தது. அங்குள்ள 6 வீடுகளில் யாரும் வசிக்கவில்லை. எதிர்திசையில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள், காரைகளை அகற்றி, கதவுகளில் படிந்திருந்த சிமென்ட் துகள்களை கழுவினர். துப்புரவு பணியாளர் களும் அப்பகுதியில் சாலைகளை சுத்தப்படுத்தி, குப்பைகளை அகற்றி, சுண்ணாம்பு தெளித்தனர்.
அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், துப்புரவு தொழிலாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி, கட்டிடம் இடிக் கப்பட்டதை கொண்டாடினர். இது தொடர்பாக, அப்பகுதியைச் சேர்ந்த எம்.மணிகண்ட பிரபு கூறும்போது, ‘‘கட்டிடம் இடிக்கப்பட்டதால் இங் குள்ளவர்கள் மகிழ்ச்சியில் உள்ள னர். கட்டிடத்தின் அருகில் உள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளி, முதல் கட்டிடம் இடிந்ததும் மூடப்பட்டுவிட் டது. மாணவர்கள், அருகில் உள்ள பள்ளியில் குறைவான இடத்தில் தற் போது படித்து வருகின்றனர். 2-வது கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளதால், பள்ளியை சுத்தப்படுத்தி, சீரமைத்து மீண்டும் திறக்க வேண்டும்’’ என்றார்.
2 ஆண்டுகளுக்கு முன்பு முதல் கட்டிடம் இடிந்தபோது, அதன் பின் புறம் இருந்த வீடுகள் சேதமடைந் தன. பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு மக்கள் குடியிருக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. அங்குள்ள ஒரு வீட்டின் உரிமையாளர் எஸ்.அப்துல்காதர் கூறும்போது, ‘‘பாதுகாக்கப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்டதால், இங்குள்ள 5 வீடுகளின் உரிமையாளர்கள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டோம். தற்போது ராஜா அண்ணாமலைபுரத்தில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறேன். முதல் கட்டிடம் இடிந்து விழுந்தபோது, எங்கள் வீட்டிம் விரிசல்கள் ஏற்பட்டன. மாவட்ட நிர்வாகம் எங்களிடம் வீடு தொடர்பான ஆவணங்களை வாங்கியுள்ளது. ஆனால், இதுவரை இழப்பீட்டு தொகை தரவில்லை. முதல்வர் தனிப்பிரிவில் மனு அளித்தும் பயனில்லை’’ என்றார்.