

சென்னை: தமிழகம் முழுவதும் எல்கேஜி, யூகேஜிகளில் ரூ.5000 தொகுப்பூதியத்தில் ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறை மூலம் எல்கேஜி, யூகேஜி வகுப்பு நடத்தப்பட்டு வந்தது. இதன் நிர்வாகம் பள்ளிக் கல்வி துறையிடம் இருந்தாலும், பள்ளிகளின் வளாகங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களில்தான் இந்த வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதன்படி தமிழகம் முழுவதும் 2,381 எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த ஆண்டு முதல் எல்கேஜி, யூகேஜி மூடப்படுவதாக கடந்த ஜூன் மாதம் தகவல் வெளியானது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இந்த உத்தரவை தமிழக அரசு திரும்பப் பெற்றது. மீண்டும் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் செயல்படும் என்று அறிவித்தது.
இதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் எல்கேஜி, யூகேஜிகளில் கடந்த ஜூன் மாதம் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் எல்கேஜி, யூகேஜிகளில் ரூ.5000 ஆயிரம் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
இதன்படி 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு ரூ.5,000 தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களை பள்ளி மேலாண்மைக் குழு வாயிலாக நியமனம் செய்ய ரூ.13.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.