

சென்னை: "வானிலை ஆய்வு மையத்தில் இருந்து கிடைத்திருக்கும் தகவலின்படி, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 35 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை அதிகமாக பெய்யும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், " வானிலை ஆய்வு மையத்தில் இருந்து கிடைத்திருக்கும் தகவலின்படி, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 35 சதவீதம் முதல் 75 சதவீதம் அதிகமாக பெய்யும் என்று எதிர்பார்க்கிறோம். எப்படி தென்மேற்கு பருவமழையை இந்த அரசு கையாண்டதோ, அதைவிட சிறப்பாக வடகிழக்குப் பருவமழையை கையாண்டு எந்தவிதமான உயிர்சேதமோ, பொருட்சேதமோ இல்லாத வகையில் இருக்கவேண்டுமென அரசு எண்ணுகிறது.
அதற்கு உதவியாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் (NDRF) 1149 பேரும், தமிழக அரசின் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் (TNDRF) 899 பேரும் என 2048 பேரை நாங்கள் தயாராக வைத்திருக்கிறோம். 121 பன்னோக்கு மையங்கள் தயாராக இருக்கிறது. எல்லா வகையிலும், வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கிறது.
சென்னை மாநகராட்சியில் தற்போது மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்தப் பணிகளைத் துரிதப்படுத்தி பருவமழைக்கு முன்பாக முடிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் மற்றும் அந்த துறையின் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார். பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பயிர் சேதங்கள் ஏற்பட்டால், உடனடியாக நிவாரணம் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விவசாய துறையைச் சேர்ந்த அதிகாரிகள் அந்த பணிகளுக்கும் தயாராக இருக்கின்றனர்" என்று அவர் கூறினார்.