

சென்னை: ஆப்பிரிக்காவில் குழந்தைகள் மரணத்திற்கு காரணமான மருத்து நிறுவனத்தின் தயாரிப்புகள் ஏதேனும் தமிழகத்தில் பயன்பாட்டில் உள்ளதா என்று ஆய்வு செய்யும் பணியை மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தொடங்கியுள்ளது.
ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து குடித்து 66 குழந்தைகள் பலியாகினர். இதற்கு மெய்டன் ஃபார்மாசுட்டிகல்ஸ் என்ற இந்திய நிறுவனத்தின் தயாரிப்புகள் காரணமாக இருக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் நேற்று (அக்.5) கூறுகையில், "காம்பியாவில் குழந்தைகள் இறப்புடன் 4 இருமல் மருந்துகளுக்குத் தொடர்பு இருக்கலாம் என்று அறியப்படுகிறது. இந்தக் குறிப்பிட்ட 4 மருந்துகளால் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இந்தச் சிறு குழந்தைகளின் உயிரிழப்பு நெஞ்சைப் பிளக்கும் அளவுக்கு வேதனை தருகிறது. அவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவிக்கிறேன். சந்தேகத்துக்குரிய 4 இருமல் மருந்துகள் குறித்தும் இந்தியாவின் மெய்டன் ஃபார்மாசுட்டிக்கல்ஸ் லிமிடட் நிறுவனத்திடமும், இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்திடமும் விசாரணை மேற்கொண்டுள்ளோம்” என்றார்.
ரோமேதசைன் ஓரல் சொல்யூஷன், கோஃபெக்ஸ்மாலின் பேபி காஃப் சிரப், மேக்காஃப் பேபி காஃப் சிரப் மற்றும் மேக்ரிப் என் கோல்டு சிரப் ஆகிய 4 மருந்துகள் தான் மரணத்திற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. இந்நிலையில், மெய்டன் ஃபார்மாசுட்டிகல்ஸ் நிறுவனத்தின் மருந்துகள் வெளிச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறாதா என்று மத்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வைத் தொடங்கி உள்ளனர்.
இது மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தின் சென்னை பிரிவு அதிகாரிகள் கூறுகையில், "ரோமேதசைன் ஓரல் சொல்யூஷன், கோஃபெக்ஸ்மாலின் பேபி காஃப் சிரப், மேக்காஃப் பேபி காஃப் சிரப் மற்றும் மேக்ரிப் என் கோல்டு சிரப் ஆகிய 4 மருந்துகள் உள்நாட்டில் விற்பனை செய்யப்படுவதில்லை. ஏற்றுமதி மட்டுமே செய்யப்படுகிறது. இதைத் தவிர்த்து இந்த நிறுவனத்தின் வேறு மருந்துகள் தமிழகச் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறாதா என்பதை ஆய்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது" என்று தெரிவித்தனர்.