Published : 06 Oct 2022 01:05 PM
Last Updated : 06 Oct 2022 01:05 PM
புதுக்கோட்டை: கணினித் துறை வேலை வழங்குவதாகக் கூறி, மியான்மர் நாட்டுக்கு அழைத்துச் சென்று மோசடி கும்பலிடம் சிக்க வைத்த ஏஜென்ட் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கிருந்து மீட்கப்பட்ட புதுக்கோட்டை இளைஞர் வலியுறுத்தியுள்ளார். கணினி, தகவல் தொழில்நுட்பப் பணிகளுக்காக தாய்லாந்துக்கு வந்த நிலையில், மியான்மரில் மோசடி கும்பலிடம் சிக்கித் தவிப்பதாகவும், தங்களை மீட்க வேண்டும் என தமிழர்கள் கோரிக்கை விடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து, இவர்களை மீட்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் கடிதம் அனுப்பினார். இதன்படி மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கையால் மியான்மரில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 13 தமிழர்கள் மீட்கப்பட்டு, நாடு திரும்பினர்.
இந்நிலையில், மியான்மரில் இருந்து புதுக்கோட்டை திரும்பிய ஷேக் அப்துல்லா கூறியது: கணினித் துறையில் வேலை இருப்பதாகக் கூறி, காரைக்குடியைச் சேர்ந்த ஏஜென்ட் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் ஜூன் 11-ம் தேதி துபாய் புறப்பட்டுச் சென்றோம். அங்கு அந்த நிறுவனத்தில் வேலை இல்லை என்றும், தாய்லாந்து நாட்டில் உள்ள கிளை நிறுவனத்தில் வேலைக்குச் சேர்த்து விடுவதாகவும் கூறி, ஜூலை 1-ம் தேதி தாய்லாந்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து பணியிடத்துக்கு அழைத்துச் செல்வதாக தெரிவித்து, 8 மணி நேரம் பயணம் செய்து, மியான்மர் நாட்டின் எல்லையோரம் காட்டில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக முகாமில் தங்கவைத்தனர்.
அங்கிருந்து நாங்கள் எங்கும் சென்றுவிடாமல் இருக்க துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தனர். கணினி மூலம் போலியான ஐடி கொடுத்து உலகம் முழுவதும் ஆட்களை மூளைச் சலவை செய்து கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யுமாறு பேச வேண்டும் என்பதுதான் எங்களுக்கு அங்கு அளிக்கப்பட்ட வேலை. முதலீடு செய்ததும் அந்த ஐடியை முடக்கிவிடுவார்கள்.
தினமும் அவர்கள் நிர்ணயிக்கும் இலக்குப்படி பேசி, முதலீடு கிடைக்க பெறாதவர்களுக்கு எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்தனர். அடித்துத் துன்புறுத்தினர். 8 மணிநேர வேலை என்று கூறிவிட்டு, நாள்தோறும் 16 மணிநேரம் கட்டாய வேலை செய்ய வேண்டும் என துப்பாக்கியை வைத்து நிர்பந்தம் செய்தனர். தற்காலிக முகாமில் தங்கியிருந்த 16 பேரில் 13 பேர் ஏஜென்ட் மூலமாகவும், மற்ற 3 பேர் சமூக வலைதள விளம்பரங்களைப் பார்த்தும் வந்தவர்கள். எங்களைப் போலவே அங்கு பல்வேறு முகாம்களில் ஏராளமானோர் அடைக்கப்பட்டு கொடுமைக்கு உள்ளாகி வருகின்றனர்.
பெரும் முயற்சிக்குப் பிறகு இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டோம். பின்னர், மியான்மர் ராணுவ உதவியுடன் இரவு நேரத்தில் ஆற்றைக் கடந்து தாய்லாந்து சென்றோம். பின்னர், காட்டுக்குள் பயணித்து, சாலையைக் கண்டுபிடித்தோம். ஆனால், தாய்லாந்து ராணுவத்திடம் சிக்கிக் கொண்டோம். தாய்லாந்து ராணுவத்தினர் எங்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு எங்கள் அனைவருக்கும் தலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், எங்களின் நிலையைக் கேட்ட நீதிபதிகள், அபராதம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்தனர். 20 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர், பாங்காக்கில் 15 நாட்கள் தங்கினோம். இந்தக் கொடுமைகள் அனைத்தும் இந்திய தூதரகத்துக்குத் தெரியும்.
தாய்லாந்தில் ஒரு வேளை சாப்பாட்டுக்கே வழியின்றி தவித்தோம். அங்கிருந்த தமிழ் முஸ்லிம் மக்கள் உணவளித்து உதவினர். அதன்பிறகு, மத்திய- மாநில அரசுகள் உதவியுடன் தமிழகத்துக்கு வந்து சேர்ந்தோம். எங்களை அனுப்பிய ஏஜென்ட் மூலம் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே செய்யானத்தைச் சேர்ந்த ஒருவரும் பாதிக்கப்பட்டு, தாய்லாந்தில் அவதிப்பட்டு வருகிறார். எங்களை ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்க வைத்த ஏஜென்ட் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். முகாமில் தங்கிய 16 பேரில் 13 பேர் ஏஜென்ட் மூலமும் மற்ற 3 பேர் சமூக வலைதள விளம்பரங்களை பார்த்தும் வந்தவர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT