சங்கரதாஸ் சுவாமிகள் நினைவிடத்தை சீரமைக்க நடிகர் சங்கம் உதவுமா?- முக்கிய நடிகர்கள் பங்கேற்காமல் முடிந்த நினைவஞ்சலி

சங்கரதாஸ் சுவாமிகள் நினைவிடத்தை சீரமைக்க நடிகர் சங்கம் உதவுமா?-  முக்கிய நடிகர்கள் பங்கேற்காமல் முடிந்த நினைவஞ்சலி
Updated on
2 min read

‘தமிழ் நாடகத் தந்தை’ என்று போற்றப்படும் சங்கரதாஸ் சுவாமிகளின் 94-வது நினைவு அஞ்சலி முக்கிய திரையுலக நடிகர்கள் பங்கேற்பில்லாமல் நடந்து முடிந்துள்ளது. இவரது நினைவிடத்தின் மேற்கூரையை நடிகர் சங்கம் சீரமைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தமிழ் நாடகத் தந்தை, தமிழ் நாடக மறுமலர்ச்சியாளர் என்று போற்றப்படுபவர் சங்கரதாஸ் சுவாமிகள். ஏறத்தாழ 30 ஆண்டு களுக்கும் மேலாக தமிழ் நாடகத்தை தனது மூச்சாகக்கொண்டு சுமார் 63 நாடகங்களை அரங்கேற்றியவர். மிகவும் பிரபலமான கலைஞர் களான எஸ்.ஜி.கிட்டப்பா, டி.கே.சண்முகம் சகோதரர்கள், எம்.ஆர்.ராதா போன்ற முன்னணி நடிகர்களை அறிமுகப்படுத்தியவர்.

தூத்துக்குடியை அடுத்த காட்டுநாயக்கன்பட்டியில் 1867-ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி பிறந்த சங்கரதாஸ் சுவாமிகள், நாடக நடிகராக தன் வாழ்க்கையை தொடங்கினார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவரை, ஜெயராம் நாயுடு என்பவர் புதுச்சேரிக்கு அழைத்து வந்து, அவரது இறுதிக்காலம் வரை பராமரித்து வந்தார். கடந்த 1922-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி சங்கரதாஸ் சுவாமிகள் மறைந்தார். அவரது உடல் கருவடிக்குப்பம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

சங்கரதாஸ் சுவாமிகள் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், 1956-ம் ஆண்டில் தஞ்சை ராமையாதாஸ், டி.கே.சண்முகம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்க உதவியுடன் ஜெயராம் நாயுடு, வ.சுப்பையா ஆகியோரின் முயற்சியால் முழு நினைவு மண்டபம் எழுப்பப்பட்டது. சங்கரதாஸ் சுவாமிகள் வசித்து வந்த ஒத்தவாடை வீதி, 1969-ம் ஆண்டில் சங்கரதாஸ் வீதி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவு நாளில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கடந்த 1994-ம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.

தென்னிந்திய நடிகர்கள் சங்க தலைவர் நாசர் கடந்த ஆண்டு இவ்விழாவில் பங்கேற்றார். அப்போது அவர், 2016-ம் ஆண்டில் முக்கிய நிர்வாகிகள் திரளாக பங்கேற்போம் என்று கூறினார். ஆனால், இம்முறை நாசர் உட்பட முக்கிய நடிகர்கள் யாரும் பங்கேற்கவில்லை. நிர்வாகிகள் குட்டி பத்மினி, லலிதாகுமாரி உள்ளிட்ட சிலரே பங்கேற்றனர்.

இது தொடர்பாக புதுச்சேரி மாநில கலை இலக்கிய பெருமன்ற சிறப்புத் தலைவர் கலைமாமணி ராமன் கூறும்போது, “தற்போது சங்கரதாஸ் சுவாமிகள் நினைவிடத்தில் கூரை பழுதாகி உள்ளது. அதைச் சீரமைக்க வேண் டும். பாதையையும் செப்பனிட வேண்டும் என கடந்த ஆண்டே கோரிக்கை வைத்தோம். உடனே செய்வதாகக் கூறினர். ஆனால் அவை சீரமைக்கப்படவில்லை” என்றார்.

இது தொடர்பாக விழாவுக்கு வந்திருந்த நிர்வாகி குட்டி பத்மினியிடம் கேட்டபோது, “கோரிக்கைகளை நிறைவேற்ற சிறிது காலம் தர வேண்டும். நடிகர் சங்கக் கட்டிடம் கட்டுவதே முதன்மையான பணி. அதை முடித்த பின் ஏனைய பணிகளில் கவனம் செலுத்துவோம்” என்றார்.

கரூர், மதுரை, திண்டுக்கல் உட்பட ஏராளமான பகுதிகளில் இருந்து ஏழ்மையான நிலையிலும் தங்களின் சொந்த செலவில் வந்திருந்த நாடகக் கலைஞர்கள், தங்களின் உண்மையான அன்பை வெளிப்படுத்தும் வகையில் அஞ்சலி செலுத்தினர். பலரும் அவரைத் தங்களின் குலதெய்வம் என்றே அழைத்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in