Published : 06 Oct 2022 04:30 AM
Last Updated : 06 Oct 2022 04:30 AM

நாமக்கல் | கோயில் திருவிழாவில் விநோத வழிபாடு - சாட்டையால் அடித்து பேய் விரட்டும் நிகழ்ச்சி

நாமக்கல்

நாமக்கல்லை அடுத்த பவித்திரம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அச்சப்பன் கோயிலில் திருவிழா நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் விழாவில் முதல் நாளான நேற்று பேய் விரட்டும் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆயுத பூஜைக்கு மறுநாள் விஜயதசமி அன்று திருவிழா நடைபெறும். இந்தாண்டுக்கான விழா நேற்று தொடங்கியது. இரு நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முதல் நாளான நேற்று பேய் விரட்டும் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், பங்கேற்றால் திருமணம் கைகூடும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதில், கலந்து கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கோயில் வளாகத்தில் உள்ள திறந்தவெளியில் கைகளை மேலே கூப்பியபடி மண்டியிட்டிருந்தனர்.

அவர்களை கோயில் பூசாரி மற்றும் கோமாளி வேடமணிந்தவரும் ஆளுயர சாட்டையால் அடித்தனர். இவ்வாறு அடித்தால் தீய சக்திகள் வெளியேறிவிடும். மேலும், தாங்கள் நினைத்தது நிறைவேறும் என பக்தர்கள் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து, பராம்பரிய சேர்வை நடனம் மற்றும் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சேர்வை நடனத்தின்போது மேள தாளத்துக்கு ஏற்றார்போல கோமாளியும், பூசாரியும் நடனமாடினர்.

கரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த இரு ஆண்டாக திருவிழா நடக்காத நிலையில் நேற்று நடைபெற்ற விழாவில்,பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்றும் விழா நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x