

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வட்டத் தலைநகரான ஆர்.கே.பேட்டை (ராமகிருஷ்ணராஜா பேட்டை) முன்பாக பள்ளிப்பட்டு வட்டத்தில் இருந்தது. ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளை உள்ளடக்கி 2019-ல்ஆர்.கே.பேட்டை வட்டம் உருவாக்கப்பட்டு, அப்போதைய முதல்வர் பழனிசாமியால் தொடங்கப்பட்டது.
இது ஆர்.கே.பேட்டை, பாலாபுரம், எறும்பி ஆகிய 3 குறுவட்டங்களின் கீழ் உள்ள,37 வருவாய் கிராமங்களை உள்ளடக்கியது. வட்டத் தலைநகரான ஆர்.கே.பேட்டையில் வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம், காவல் நிலையம், வங்கிகள், வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை, கல்வித் துறை அலுவலகங்கள் உள்ளன. ஆனால், பேருந்து நிலையம் மட்டும் இல்லை. இதனால் திருத்தணி, பள்ளிப்பட்டு, சோளிங்கர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஆர்.கே.பேட்டை வழியாக செல்லும் பேருந்துகள் சாலைகளிலேயே நின்று பயணிகளை ஏற்றி, இறக்குகின்றன. இதனால் திருத்தணி, சோளிங்கர், பள்ளிப்பட்டு ஆகிய 3 பிரதான சாலைகளிலும் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், அத்தியாவசிய அவசர தேவைகளுக்கு வரும்மக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். விவசாயிகள், நெசவாளர்கள் தங்கள் பணிசார்ந்துசென்னைக்கு சென்று வருவதிலும் தாமதம் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலைத் தீர்க்க ஆர்.கே.பேட்டையில் பேருந்து நிலையம் அமைப்பதே தீர்வாகும். இதனால் பேருந்துகள் சாலையில் நிற்பது தவிர்க்கப்படும். இதனால் போக்குவரத்து நெரிசலுக்கு வாயப்பில்லாமல் போகும்என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர், ஊரக வளர்ச்சித் துறைஅதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “ஆர்.கே.பேட்டையில் போதிய இடம் இல்லை. ஆகையால், தற்போது பேருந்து நிலையம் அமைப்பதற்கான முயற்சிகள் தடைபட்டு வருகின்றன. அதே நேரத்தில், ஆர்.கே.பேட்டை பகுதியில் புறவழிச்சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. புறவழிச்சாலை அமைக்கப்பட்டால், கண்டெய்னர் லாரிகள் உள்ளிட்ட கணிசமான வாகனங்கள் நகருக்குள் உள்ள பிரதான சாலைகளில் வர வேண்டிய தேவை இருக்காது. இதனால், ஓரளவு வாகன நெரிசல் குறையும்” என்றனர்.