

மாமல்லபுரம்: கிழக்கு கடற்கரையை ஒட்டி சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரம், கல்பாக்கம் அணுமின் நிலையம் ஆகியவை அமைந்துள்ளன. சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதிகளை பாதுகாக்கும் பணியில் போலீஸார் மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக கோவளம், மாமல்ல புரம், பூஞ்சேரி, வெங்கம்பாக்கம், வாயலூர், கூவத்தூர், எல்லையம்மன் கோயில், கொளத்தூர் உள்ளிட்ட இடங்களில் கடலோர பாதுகாப்பு குழுமத்தின் சோதனைச் சாவடிகள் உள்ளன.
இந்தச் சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள போதிய அளவில் காவலர் நியமிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், சில இடங்களில் சோதனை சாவடிகள் பூட்டிய நிலையிலேயே உள்ளதால், ஈசிஆர் சாலை மார்க்கமாக போதைபொருள் உள்ளிட்ட கடத்தல் சம்பவங்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, ஈசிஆர் பகுதி மக்கள் சிலர் கூறும்போது, ‘‘காவலர் பற்றாக்குறையால் சோதனைச் சாவடிகள் காவலர்களின்றி மூடியநிலையிலேயே காட்சியளிக்கின் றன. மேலும், நடந்து முடிந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின்போது, பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட போலீஸார் தங்குமிடமாக சோதனை சாவடி கட்டிடங்கள் பயன்படுத்தப்பட்டன. சர்வதேச செஸ் போட்டியின்போது வாகன தணிக்கை மற்றும் கண்காணிப்பு பணிகள் நடந்ததால் கள்ளச்சந்தை மது விற்பனைகூட நடைபெற வில்லை. ஆனால், தற்போது மீண்டும் பல்வேறு சட்ட விரோத செயல்கள் அரங்கேறி வருகின்றன’’ என்றனர்.
இதுகுறித்து, கடலோர பாதுகாப்பு குழும வட்டாரங்கள் கூறியதாவது: கிழக்கு கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில், கடலோர பாதுகாப்பு குழுமத்தின் சார்பில் கோவளம், மாமல்லபுரம், சதுரங்கப்பட்டினம், முதலியார் குப்பம் ஆகிய பகுதிகளில் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் உட்பட 10 போலீஸார் பணியில் இருக்க வேண்டும். ஆனால், ஓர் உதவி ஆய்வாளர் மட்டுமே பணியில் உள்ளார். மற்ற பணியிடங்கள் அனைத்தும் காலியாக உள்ளன. மேலும் இந்தகாவல் நிலையங்களில் கணினி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படாமல் செயல்பாடின்றி முடங்கியுள்ளன. இவ்வாறு வட்டாரங்கள் தெரிவித்தன.