

திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே ஆரணியில் சிறுவர் இருவரை பாம்புகடித்ததில், அண்ணன் உயிரிழந் தார். தம்பி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி எஸ்.பி.கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் பெயிண்டரான பாபு- விஜயலட்சுமி தம்பதி. இவர்களின் மகன்களான ரமேஷ்(14), தேவராஜ் (13) ஆகியோர், ஆரணி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9, 8 -ம்வகுப்புகளில் படித்து வந்தனர்.
இந்நிலையில்,நேற்று முன்தினம் இரவு, பாபுவின் குடும்பத்தினர் அனைவரும் உணவருந்திவிட்டு, தங்கள் குடிசை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, குடிசை வீட்டிக்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பு, ரமேஷ், தேவராஜ் ஆகிய இருவரை கடித்துள்ளது. இதனால், வாந்தி எடுத்து மயக்கமான ரமேஷ், தேவராஜ்ஆகிய இருவரும் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை ரமேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தேவராஜ், தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, ஆரணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.