

சென்னை: மர்ம தேசம், ஜீ பூம்பா உள்ளிட்ட பிரபலமான சின்னத்திரை தொடர்களில் சிறுவன் நட்சத்திரமாக நடித்துப் புகழ் பெற்றவர் லோகேஷ் (31). சென்னை அருகே மாடம்பாக்கத்தில் மனைவி அனிஷா (28), 2 மகன்களுடன் வசித்து வந்தார். காதல் திருமணம் செய்திருந்த லோகேஷும், அனிஷாவும் கருத்துவேறுபாடு காரணமாக 6 மாதங்களுக்கு முன்பு பிரிந்தனர். பின்னர்லோகேஷ், மதுவுக்கு அடிமையானதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் வசிக்கும் தனது தாயை கடந்த 2-ம் தேதி சந்தித்துவிட்டு லோகேஷ், அங்கிருந்து அரசுப் பேருந்தில்கோயம்பேடுக்கு வந்து கொண்டிருந்தார். பேருந்தில் ஏறும் முன்னரே அவர் விஷம் அருந்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் பேருந்து கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்துக்கு வந்தபோது, அவர் மயங்கி விழுந்தார்.இதைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள், லோகேஷை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த லோகேஷ் நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதுகுறித்து சிஎம்பிடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். நடிகர் லோகேஷ் தற்கொலை சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.