

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் அருகில், அவரது பெயரில் வங்கக் கடலில் பேனா நினைவுச் சின்னத்தை அமைக்கும் திட்டம் தொடர்பாக மீனவர்கள் கருத்துடன், சுற்றுச்சூழல் தாக்க இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை கடிதம் எழுதியுள்ளது.
இது தொடர்பாக, தமிழக பொதுப்பணித் துறை செயற்பொறியாளருக்கு, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை விஞ்ஞானி எச்.கார்க்வால் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் வங்கக் கடலில் ‘மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக பேனா நினைவுச் சின்னம்’ அமைப்பதற்கான கருத்துரு அனுப்பப்பட்டிருந்தது. இந்த கருத்துரு, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்டு, கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதிக்கு அனுப்பப்பட்டது.
இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட்24-ம் தேதி நடைபெற்றக் கூட்டத்தில், கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் உட்கட்டமைப்பு மேம்பாடு குறித்த மதிப்பீட்டு நிபுணர் குழு பரிசீலித்தது. நினைவுச்சின்னம் அமையும் இடத்தின் அட்சரேகை, தீர்க்க ரேகை கோணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. மொத்தம் 8,551.13 சதுரமீட்டரில், பேனாவுக்கான அடித்தளம் 2,263.08 சதுர மீட்டரிலும், கடலுக்கு மேல் பொதுமக்கள் நடைபாதை 2,073.01 சதுர மீட்டரிலும், கடல் மற்றும் நிலம் இடையிலான பாலம் 1,856 சதுர மீட்டரிலும், கடற்கரையில் நடைபாதை 1,610.60 சதுர மீட்டரிலும், கருணாநிதி நினைவிடம் மற்றும் பாலம் இடையிலான நடைபாதை 748.44 சதுர மீட்டரிலும் அமைகிறது. இயல், இசை, நாடகத் தமிழுக்குகருணாநிதி அளித்த பங்களிப்பை நினைவுகூரும் வகையில் அமையும் இந்த நினைவுச் சின்னம் ரூ.81 கோடி செலவில் நிறுவப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 6 மீட்டர் உயரத்துக்கு மேல் நினைவுச் சின்னம் அமைக்கப்படுகிறது.
கடற்கரையில் இருந்து வங்கக்கடலுக்குள் 360 மீட்டர் தொலைவில் அமையும் இந்த சின்னத்தின் உயரம்42 மீட்டர். இந்த நினைவுச் சின்னத்தை அமைக்கும் கருத்துருவுக்கு, தமிழ்நாடு கடற்கரை மண்டலமேலாண்மை ஆணையம் பரிந்துரை வழங்கியுள்ளதுடன், மதிப்பீட்டுக்கான நிபுணர் குழுவும் சில பரிந்துரைகளை அளித்துள்ளது. இவற்றின்படி, விரிவான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வைமேற்கொள்வதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் வரையறைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, மாநில அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம், சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம், இடர் மதிப்பீட்டு அறிக்கை, பேரிடர் மேலாண்மைத் திட்டம், அவசரகால திட்டங்கள் ஆகியவற்றுடன் கூடிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்
மேலும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு தொடர்பான அரசின் அறிவிக்கைப்படி, மீனவர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் கருத்துகளை கேட்க வேண்டும். கடல் வாழ் உயிரினங்களின் வாழ்விடப் பாதுகாப்பு, மீன்பிடிப் படகுகள் போக்குவரத்து, மீன்பிடி நடவடிக்கைகள் மீதான தாக்கம் ஆகியவை ஆய்வு செய்யப்பட வேண்டும். மேலும், கடலின் ஆழத்தை அதிகரிக்கும் நடவடிக்கை குறித்ததகவலும் இடம் பெற வேண்டும்.
இதுதவிர, இந்த ஆய்வில் இடர்தணிப்புத் திட்டம், நினைவிடம் மற்றும் அங்கு வரும் பார்வையாளர்களுக்கான பாதுகாப்பு குறித்த தகவல்களும் இடம் பெற வேண்டும்.மேலும், கூட்டம் அதிகமாகும் நிலையில் அதை மேலாண்மை செய்வதற்கான திட்டம் குறித்தும் அதில் இடம் பெற வேண்டும். இவை அடங்கிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு தொடர்பான இறுதி அறிக்கையை, இந்திய தர கவுன்சில் அல்லது தேசியக் கல்வி மற்றும் பயிற்சிக்கான அங்கீகாரக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆலோசகர் மூலம் தயாரிக்க வேண்டும். அதன் பின்னர், அந்த அறிக்கையானது கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதிக்கு 4 ஆண்டுகளுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.