

மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் ரூ.124 கோடியில் நடக்கும் ஜைக்கா திட்ட புதிய கட்டிடப் பணி 60 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளது.
கட்டுமானப்பணி தாமதமாவதால் இடநெருக்கடி காரணமாக நோயாளிகள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மிகுந்த சிரமத்தைச் சந்திக்கின்றனர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகள் வருகை, செயல்படும் சிகிச்சைப் பிரிவுகளுக்கு தகுந்தவாறு போதிய கட்டிட வசதியில்லை.
ஒவ்வொரு சிகிச்சைப் பிரிவும் மருத்துவமனையில் நோயாளிகள் கண்டறிய முடியாத அளவுக்கு குறுகிய இடங்களில் மிகுந்த இடநெருக்கடிக்குள் செயல்படுகின்றன.
தனியார் மருத்துவமனைக்கு நிகராக தமிழக அரசு அதிநவீன சிகிச்சை கருவிகளை வழங்கியபோதிலும் அதற்கான அறுவைசிகிச்சை அரங்குகள் இல்லாமல் மருத்துவமனை நிர்வாகம் திணறுகிறது.
அதனால், அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தும் திட்டத்தில் ஜப்பான் நாட்டின் (JICA) நிறுவனத்தின் 85 சதவீத நிதியுதவியுடனும், 15 சதவீத மாநில அரசின் நிதியுடனும்
மதுரை அரசு மருத்துவ மனையில் ரூ.121.80 கோடியில் பிரம்மாண்ட புதிய கட்டிடம் கட்டும் பணி 2020-ம் ஆண்டு தொடங்கி நடந்து வருகிறது. இந்தக் கட்டிடத்தில் பிரம்மாண்ட அறுவைசிகிச்சை அரங்குகள் அமைக்கப்படுகின்றன.
மொத்தம் 7 அடுக்கு மாடியுடன் அமையும் இந்தக் கட்டிடத்துக்கு ‘டவர் பிளாக்’ கட்டிடம் என பெயரிடப்பட்டுள்ளது. கீழ்த்தளம் மட்டும் 3,996.15 சதுர மீட்டர் பரப்பளவுடன் அமைகிறது.
7 தளங்களும் மொத்தம் 22,580.90 சதுர மீட்டர் பரப்பில் கட்டப் படுகிறது. தற்போது அனைத்து தள கட்டுமானப்பணிகள் முடிந்த நிலையில் உள் அரங்கு அமைக்கும் பணிகள் மீதமுள்ளன.
பிற பணிகளைவிட உள் அரங்குப் பணி கள்தான் அதிக காலம் பிடிக்கும். கட்டுமானப் பணியை 2023 பிப்ரவரிக்குள் பொதுப்பணித் துறை முடிக்க வேண்டும். ஆனால், தற்போது வரை 60 சதவீதப் பணிகள்தான் முடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து மருத்துவத் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘இன்னும் மின் இணைப்புக்கூட இந்த புதிய கட்டிடத்துக்குப் பொதுப் பணித்துறை வாங்கவில்லை. உள் அரங்கு வேலைப்பாடுகள் இன்னும் தொடங்கவே இல்லை.
அதனால், நிர்ண யிக்கப்பட்ட காலத்தில் இப்பணியை முடிக்க வாய்ப்பில்லை,’ என்றார். கட்டுமானப்பணிகள் தாமதமாக நடப்பதால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் இடநெருக்கடியால் மிகுந்த சிரமம் அடைகின்றனர்,