Published : 26 Nov 2016 08:41 PM
Last Updated : 26 Nov 2016 08:41 PM

புரட்சிகர குறியீடாக ஃபிடல் காஸ்ட்ரோ என்றும் நிலைத்திருப்பார்: திருமாவளவன்

உலகம் முழுவதும் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுகிறவர்களுக்கு உத்வேகத்தை வழங்கக்கூடிய புரட்சிகர குறியீடாக ஃபிடல் காஸ்ட்ரோ என்றும் நிலைத்திருப்பார் என்று விசிக தலைவர் திருமாவளவன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

ஃபிடல் காஸ்ட்ரோ மறைவு தொடர்பாக திருமாவளவன் இன்று வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''கியூபாவில் மக்கள் புரட்சியை ஏற்படுத்தி, சுமார் 50 ஆண்டுகாலம் அந்த நாட்டை சோசலிசப் பாதையில் வழிநடத்திய மாபெரும் புரட்சியாளர் தோழர் ஃபிடல் காஸ்ட்ரோ தனது 90வது அகவையில் இயற்கை எய்தினார் என்ற செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அமெரிக்க வல்லரசிய ஆதிக்க எதிர்ப்பின் குறியீடாக திகழ்ந்த புரட்சியாளர் காஸ்ட்ரோவுக்கு செம்மாந்த வீரவணக்கம்.

தனது 33வது வயதில் கியூபா நாட்டின் புரட்சிக்குத் தலைமையேற்று உலகத்தையே திரும்பிப் பார்க்க செய்தவர் ஃபிடல் காஸ்ட்ரோ. அமெரிக்க வல்லரசின் கொல்லைப் புறத்திலேயே ஒரு சோசலிச அரசை நிர்மாணித்துக் காட்டியவர். அவரைக் கொல்வதற்கு வல்லரசிய சக்திகள் 600க்கும் மேற்பட்ட முறை முயற்சித்தார்கள். அத்தனையிலும் தப்பித்துத் தொடர்ந்து அவர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர்.

கியூபா நாட்டின் புரட்சி வெற்றிபெற்றதும் அங்கிருந்த அமெரிக்க முதலீடுகள் அனைத்தையும் நாட்டுடமையாக்கினார். அதனால், அமெரிக்கா கடுங்கோபங்கொண்டு கியூபாவுக்கு எதிராக பொருளாதாரத் தடையை விதித்தது. அப்போதும் மனம் தளராமல் தனது நாட்டுமக்களின் ஆற்றலில் நம்பிக்கைவைத்து சோசலிச அரசை வழிநடத்திச்சென்றார்.

கியூபா நாட்டில் புரட்சியை ஏற்படுத்தியது மட்டுமின்றி உலகமெங்கும் அடிமைத்தனத்திற்கு எதிராக நடைபெற்றுவந்த விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவு அளித்தார். ஆப்பிரிக்க நாடுகளின் நிறவெறிக்கு எதிராக நடைபெற்றுவந்த ஆயுதப்போராட்டங்களை வெளிப்படையாக ஆதரித்தார். சர்வதேச அரங்கில் அமெரிக்க வல்லரசுக்கு எதிரான சக்திகளோடு நட்புறவு கொண்டிருந்தார். அதனால், இந்திய அரசுக்கும், அவருக்குமான உறவு எப்போதும் தோழமையோடு தொடர்ந்து வந்தது.

50 ஆண்டுக்கால ஆட்சியில் சுகாதாரம் உள்ளிட்ட சேவைகளில் உலகிலேயே முதன்மையான நாடாக கியூபாவை மாற்றிக் காட்டினார். இன்று பொது மருத்துவ வசதிகளில் அமெரிக்காவைவிட கியூபா தலைசிறந்து விளங்குகிறது. 2008ஆம் ஆண்டு பதவி விலகினாலும் தொடர்ந்து தனது அனுபவ அறிவைக்கொண்டு கியூபா நாட்டு அரசுக்கு வழிகாட்டிவந்தார்.

எத்தனையோ இடர்ப்பாடுகளை சந்தித்தபோதிலும் உயிருக்கு அச்சுறுத்தல்கள் வந்த நேரத்திலும் வல்லரசிய எதிர்ப்பு என்ற அந்த நிலைப்பாட்டில் சிறிதளவும் சமரசம் செய்துகொள்ளாமல் தனது வாழ்நாள் முழுவதும் ஒரு போராளியாகவே திகழ்ந்தார். அத்தகைய மாமனிதர் ஃபிடல் காஸ்ட்ரோவின் மறைவு ஏற்படுத்தியிருக்கும் வெற்றிடம் மிகவும் பெரியது.

உடல் அளவில் மறைந்துவிட்டாலும் உலகம் முழுவதும் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுகிறவர்களுக்கு உத்வேகத்தை வழங்கக்கூடிய புரட்சிகர குறியீடாக ஃபிடல் காஸ்ட்ரோ என்றும் நிலைத்திருப்பார்.

பிறருக்காக போராடாத எவரும் தமக்காகவும் போராட முடியாது என்று அவர் குறிப்பிட்டது உலகமெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு சர்வதேச பார்வையை வழங்கும் மந்திர வாசகமாகும். புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவை இழந்து வாடும் கியூபா நாட்டு மக்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x