Last Updated : 05 Oct, 2022 08:24 PM

 

Published : 05 Oct 2022 08:24 PM
Last Updated : 05 Oct 2022 08:24 PM

பிரான்ஸில் அமையும் 7 அடி உயர திருவள்ளுவர் வெண்கல சிலை: புதுச்சேரியில் உருவாக்கும் சிற்பக் கலைஞர்

பிரான்ஸிஸ் நிறுவ புதுச்சேரியில் தயாராகும் 7 அடி உயர திருவள்ளுவர் சிலை.

புதுச்சேரி: பிரான்ஸ் அரசு அனுமதியுடன் பாரிஸ் அருகே 7 அடி உயர திருவள்ளுர் வெண்கல சிலை அமைகிறது. இச்சிலையை குடியரசுத் தலைவர் விருது பெற்ற புதுச்சேரி சிற்பக் கலைஞர் உருவாக்கி வருகிறார். வரும் நவம்பரில் இந்தச் சிலை திறக்கப்படவுள்ளது.

பிரான்ஸிலுள்ள தமிழ்க் கலாசார மன்றம் பிரான்ஸ் அரசு அனுமதி பெற்று அங்கு மகாத்மா காந்திக்கு முழு உருவ வெண்கலச் சிலையை கடந்த 2011-ல் அமைத்தது. தற்போது பிரான்ஸ் அரசு அனுமதி பெற்று பிரான்ஸ் அருகேயுள்ள செர்ஜி நகரத்திலுள்ள மைய பூங்கா வளாகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படவுள்ளது.

இச்சிலையை குடியரசுத் தலைவர் விருது பெற்ற புதுச்சேரி சிற்பக் கலைஞர் முனுசாமி வடிவமைத்துள்ளார். இறுதிக்கட்ட பணி நடக்கிறது. இதுபற்றி சிற்ப கலைஞர் முனுசாமி கூறுகையில், "திருவள்ளுவர் சிலை வெண்கலத்தில் 7 அடியில் உருவாகிறது. 25 நாளில் திருவள்ளுவர் சிலை வடிவமைத்துள்ளோம். விரைவில் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்தவுடன் விமானத்தில் பிரான்ஸ் எடுத்து சென்று நிறுவவுள்ளோம்" என்று குறிப்பிட்டார்.

தமிழ்க் கலாசார மன்ற சிறப்பு அழைப்பாளரும் புதுச்சேரி சட்டப்பேரவை முன்னாள் தலைவருமான சிவக்கொழுந்து கூறுகையில், "பிரான்ஸ் அருகேயுள்ள செர்ஜி நகரில் வரும் நவம்பர் 11-ல் திறப்பு விழா நடக்கிறது. அதையொட்டி திருவள்ளுவர் மாநாடும் நடத்துகிறோம். சிலை அனைவரையும் கவரும் வகையில் 600 கிலோ எடையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ்க் கலாசார மன்றத்தின் மூலம் பிரான்ஸில் வாரந்தோறும் தமிழ் மொழி வகுப்புகள், பண்பாட்டு இசை, நடனப்பயிற்சி வகுப்புகளை இளையோருக்கு நடத்துகிறோம்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x