அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்: தமிழக பாஜக 

நாராயணன் திருப்பதி | கோப்புப்படம்
நாராயணன் திருப்பதி | கோப்புப்படம்
Updated on
2 min read

சென்னை: அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த அவற்றின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: " கிருஷ்ணகிரி மாவட்டம் சாலமரத்துப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், அந்த ஊர் பள்ளியின் ஆசிரியை ஒருவர் கண்ணீர்விட்டு அழுதுகொண்டே பள்ளியின் சீர்கேடான நிலை குறித்து பேசியிருப்பது தமிழக கல்வித்துறையின், தமிழக அரசு நிர்வாகத்தின் அவல நிலையை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. அந்த ஆசிரியை உள்ளம் குமுறி வெடித்து அழுவது அவரின் துயரத்தை, அரசு அதிகாரிகளிடம் அவர்பட்ட இன்னல்களை தோலுரித்துக் காட்டுகிறது.

அரசு பள்ளியில் பணியாற்றுவது 'சாபக்கேடு' என்று வெறுத்துப் பேசியிருப்பது தமிழக அரசின் கன்னத்தில் அறைந்ததற்குச் சமமானது. மின் இணைப்பைத் துண்டித்து விட்டதாகவும், ஒரு வாரமாக மோட்டார் போடவில்லை என்றும் அவர் சொல்லியிருப்பது ஒரு வாரமாக அந்த பள்ளியில் குழந்தைகளுக்கு குடிக்கவோ, கழிப்பறைக்கோ தண்ணீர் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறது.

மின் இணைப்பு கொடுக்க மறுத்து, அந்த ஆசிரியையை அவமானப்படுத்திய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும். பள்ளியின் மின் இணைப்பைக் கூட கவனிக்காமல், கண்காணிக்காமல் அலட்சியமாக உள்ள அம்மாவட்ட கல்வி துறை அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்து, மேல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். உடனடியாக அந்த பள்ளி கட்டிடத்திற்கு மின் இணைப்பு கொடுத்து மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

அந்த ஆசிரியை அடைந்த துன்பத்திற்கு உரிய இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும். அவரை கல்வி துறை அதிகாரிகளோ மற்ற அரசு அதிகாரிகளோ அச்சுறுத்தாமல் இருக்கவும், அவரின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசின் கல்விக் கொள்கை குறித்து தொடர்ந்து பேசி வரும் அமைச்சர் அன்பில் மகேஷ், இனியும் பெருமை பேசுவதை குறைத்து அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் அடிப்படைத் தேவைகளை கட்டமைக்கும் முயற்சிகளை மேற்கொள்வது சிறப்பைத் தரும். சீரழிந்து வரும் அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த, அப்பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியதுதான் உடனடி தேவை என்பதை அமைச்சர் உணர வேண்டும்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியையை அழைத்துப்பேசி ஆறுதலளித்து, இந்த சூழ்நிலைக்கு காரணமான அனைத்து அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, கடந்த அக்டோபர் 2-ம் தேதி நடந்த கிராம சபைக்கூட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்துள்ள மாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சாலமரத்துப்பட்டி கிராம சபைக் கூட்டத்தில், "தான் பணியாற்றும் அரசு நடுநிலைப் பள்ளியில் போதுமான வசதிகள் இல்லை எனவும், இதுதொடர்பாக அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த வசதியும் செய்து தரப்படவில்லை என்றும், அரசுப் பள்ளியில் பணியாற்றுவது சாபக்கேடானது என்றும் ஓலைப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் சக்தி பேசியிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in