தொழிலதிபரிடம் லஞ்சம் பெற்றதாக தொடர்ந்த வழக்கில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை கூடுதல் இயக்குநர் விடுதலை: சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு 

தொழிலதிபரிடம் லஞ்சம் பெற்றதாக தொடர்ந்த வழக்கில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை கூடுதல் இயக்குநர் விடுதலை: சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு 
Updated on
1 min read

சென்னை: லஞ்ச வழக்கில் கைதான மத்திய புலனாய்வுத் துறை கூடுதல் இயக்குநர் சி.ராஜன், அவரது வாகன ஓட்டுநர் முருகேசன் ஆகியோரை விடுதலை செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு மத்திய வருவாய் புலனாய்வுத் துறையின் சென்னை பிராந்திய கூடுதல் இயக்குநராக பதவி வகித்த சி.ராஜன் தலைமையிலான அதி
காரிகள் குழு, கப்பல் மற்றும் விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்தது.

வங்கிக் கணக்கு முடக்கம்: இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து மொபைல்போன்களை கடத்தி வந்த சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் உபயதுல்லா என்பவர் மீதான வழக்கில் அவரது வங்கிக் கணக்கை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை முடக்கி வைத்தது. உபயதுல்லாவின் வங்கிக் கணக்கை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரி சி.ராஜன், ரூ.10 லட்சம் மற்றும் ஐபேடு கேட்டதாகவும், அதன்படி, முன்தொகையாக ரூ.2 லட்சம் மற்றும் ஐபேடு ஆகியவற்றை ராஜன் தனது வாகன ஓட்டுநர் முருகேசன் மூலமாக பெற்றதாகவும் கூறி, இருவரையும் 2012-ம் ஆண்டு மார்ச்சில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இவர்கள் மீது சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை, சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மெகபூப் அலிகான் முன்பாக நடந்தது. அப்போது, கடத்தல்காரர்களுக்கு சி.ராஜன் சிம்ம சொப்பனமாக விளங்கியதாகவும், சில கார்ப்பரேட் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதை கண்டறிந்து, அந்த நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததால், திட்டமிட்டு அவரை இந்த லஞ்ச வழக்கில் சிக்க வைத்ததாகவும், இதற்கு முன்பாக அவர் மீது எந்த குற்ற வழக்கும் நிலுவையில் இல்லை என்றும் சி.ராஜன் தரப்பில் வாதிடப்பட்டது.

குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை: அதையடுத்து நீதிபதி, இருவர் மீதான குற்றச்சாட்டுகளும் அரசு தரப்பில் சரிவர நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, சி.ராஜன், ஓட்டுநர் முருகேசன் ஆகிய இருவரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in