Published : 04 Oct 2022 06:55 AM
Last Updated : 04 Oct 2022 06:55 AM

சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையிலான விரைவு சாலை பணி 2024-ல் முடியும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ட்விட்டரில் வெளியிட்ட மாதிரிப் படம்.

புதுடெல்லி: சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே ரூ.5,800 கோடியில் 20.56 கி.மீ. நீளத்துக்கு 4 வழிப் பாதையாக உயர்மட்ட விரைவு சாலை அமைக்கப்பட உள்ளது. இத்திட்டம் வரும் 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

சென்னை துறைமுகத்துக்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அத்துடன் கால தாமதமும் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், சரக்கு வாகனங்கள் செல்ல வசதியாக, சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயலுக்கு உயர்மட்ட விரைவு சாலை அமைக்க கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் (2006-11) முடிவு செய்யப்பட்டது. இதற்கான அரசாணை 2008-ல் பிறப்பிக்கப்பட்டது. கூவம் ஆறு மற்றும் தேசிய நெடுஞ்சாலை (NH-4) மீது 19 கி.மீ. தூரத்துக்கு 6 வழிச் சாலையாக அமைக்க திட்டமிடப்பட்டது. சாலைக்கான திட்ட செலவு,
நிலம் கையகப்படுத்துதல் (ரூ.310 கோடி) உட்பட ரூ.1,655 கோடி என மதிப்பிடப்பட்டது.

கடந்த 2009 ஜனவரி மாதம் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். இதையடுத்து, பணிகள் தொடங்கப்பட்டு ஆங்காங்கே தூண்களும் அமைக்கப்பட்டன. 2013-ல் இத்திட்டத்தை முடிக்க திட்டமிடப்பட்டது. இந்நிலையில், 2011-ல் ஆட்சிக்கு வந்த அதிமுக, கூவம் ஆற்றின் வழித்தடத்தை மாற்றும் வகையில் இருப்பதாக கூறி இத்திட்டத்துக்கு தடை விதித்தது.
இந்நிலையில், 2021-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த திமுக, இத்திட்டத்தை சிறு சிறு திருத்தங்களுடன் செயல்படுத்த முடிவுசெய்தது. இதன்படி, ‘‘சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையிலான உயர்மட்ட விரைவு சாலை திட்டம் செயல்படுத்தப்படும்’’ என்று நடப்பு 2022-23 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் வழங்கியது. இத்திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே மாதம் அடிக்கல் நாட்டினார்.

திருத்தம் செய்யப்பட்ட திட்டத்தின்படி, 20.56 கி.மீ. தூரத்துக்கு உயர்மட்ட சாலைஅமையும். ஏற்கெனவே 6 வழிச் சாலையாக அமைக்க திட்டமிடப்பட்ட நிலையில், இப்போது 4 வழிப் பாதையாக மாற்றப்படுகிறது. இதில் துறைமுகம் முதல் கோயம்பேடு வரையில் 2 அடுக்கு சாலை அமைய உள்ளது. இதில் கீழ் அடுக்கில் இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்டவையும், மேல் அடுக்கில் துறைமுகம் செல்லும் கனரக வாகனங்களும் செல்லும். இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழக அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக கழகம், இந்திய கடற்படை இடையே கடந்த மே மாதம் கையெழுத்தானது. இதன்படி, ரூ.5,855 கோடி செலவில் 20.56 கி.மீ. நீளத்துக்கு உயர்மட்ட விரைவு சாலை அமைக்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இப்பணிகளை மேற்கொள்ள உள்ளது.

இத்திட்டம் குறித்து மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு:

புதிய இந்தியாவில் பல்நோக்கு சாலை இணைப்பு வசதியை வழங்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன்படி, தமிழகத்தின் சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான உயர்மட்ட சாலை திட்டம் சுமார் ரூ.5,800 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படுகிறது. 20.56 கி.மீ. நீளம் கொண்ட இந்த சாலை 4 வழிப்பாதையாக இருக்கும். சென்னை துறைமுகத்தின் உட்புறத்தில் தொடங்கும் இந்த சாலை மதுரவாயலில் முடிவடையும். இத்திட்டம் வரும் 2024 டிசம்பருக்குள் முடிக்கப்படும்.

சென்னை துறைமுகத்துக்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களுக்காக பிரத்யேகமாக இந்த சாலை கட்டமைக்கப்படுகிறது. இதன்மூலம் துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் 48 சதவீதம் அதிகரிக்கும். இதுபோல, துறைமுகங்களில் வாகனங்கள் காத்திருப்பது 6 மணி நேரம் வரை குறையும். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் பொருளாதாரத்தை மேலும் ஊக்குவிக்கும் வகையில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களை விரைவாக செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x