ஜெயலலிதா வீடு திரும்பும்போது திருப்பரங்குன்றம் வெற்றியை பரிசாக தாருங்கள்: சி.ஆர்.சரஸ்வதி பிரச்சாரம்

ஜெயலலிதா வீடு திரும்பும்போது திருப்பரங்குன்றம் வெற்றியை பரிசாக தாருங்கள்: சி.ஆர்.சரஸ்வதி பிரச்சாரம்
Updated on
1 min read

முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை முடிந்து வீடு திரும்பும்போது திருப்பரங்குன்றம் தொகுதி வாக்காளர்கள் வெற்றியை பரிசாக வழங்க வேண்டும் என நடிகை சி.ஆர்.சரஸ்வதி பிரச்சாரம் செய்தார்.

திருப்பரங்குன்றம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸை ஆதரித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நடிகை சி.ஆர்.சரஸ்வதி ஹார்விபட்டி உட்பட பல்வேறு பகுதியில் நேற்று பிரச்சாரம் செய்தார். அவர் பேசியதாவது:

என்னை வாழவைத்த தாய்மார்களே எனப் பெண்களை எப்போதும் முதல்வர் ஜெயலலிதா அழைத்தார். அந்த அளவிற்கு பெண்களிடம் பாசமாக இருப்பவர். தமிழக மக்களுக்காக இரவு, பகல் பாராது உழைத்து தவவாழ்வை மேற்கொண்டுள்ள முதல்வர் தமிழக மக்களின் ஒட்டுமொத்த பிரார்த்தனை காரணமாக விரைவில் வீடு திரும்புகிறார். அப்படி திரும்பும்போது திருப்பரங்குன்றத்தின் வெற்றியை மக்கள் பரிசாக அளிக்க வேண்டும்.

அதிமுக வேட்பாளார் வெற்றி பெற்றால் தொகுதி மக்களுக்கு லாபம். தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றால் கருணாநிதிக்குத்தான் லாபம். மு.க.ஸ்டாலினும், முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் 2017-ல் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறுவது அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்பதைப்போன்றது. அத்தைக்கு மீசையும் முளைக்காது, தி.மு.க.ஆட்சியையும் பிடிக்காது.

தி.மு.க. சட்டப் பேரவை உறுப்பினர்கள் மக்கள் பணி ஆற்றாமல் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்வது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

அமைச்சர் மா.பாண்டியராஜன் உட்பட பலர் உடன் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in