

திமுக பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் உடல் நலக்குறைவால் மதுரையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 78. இவர் திமுகவின் முன்னணி பேச்சாளர்களில் ஒருவராக இருந்தவர். தனது பேச்சால் ஏராளமான தொண்டர்களை ஈர்த்தவர். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக திமுக பேச்சாளராகத் திகழ்ந்து வந்தார்.
இவரது வீடு மதுரை ஜெய்ஹிந்த் புரம் நேதாஜி சாலையில் உள்ளது. இவர் சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். அவரை சில மாதங்களுக்கு முன் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உட்பட பலர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இவருக்கு சங்கரவடிவு என்ற மனைவியும், முருகேசன், பாலசுப்பிர மணியன் ஆகிய மகன்களும், முத்து லட்சுமி, ரத்தினம் ஆகிய மகள்களும் உள்ளனர். இவரது இறுதிச் சடங்கு இன்று பிற்பகல் நடைபெறுகிறது.