

வங்கிகளில் பணம் மாற்ற வரும்போது கை விரலில் மை வைக்கும் மத்திய அரசின் அறிவிப்புக்கு ஊழியர்கள் சங்கங்கள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தே.தாமஸ் பிராங்கோ (அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப் பின் மூத்த துணைத் தலைவர்):
வங்கிகளில் 4,500 ரூபாயை மாற்ற வரும் வாடிக்கையாளர்கள் கையில் மை வைப்பது என்ற மத்திய அரசின் முடிவு ஒரு தவறான போக்காகும். இதற்கான மை எங்கிருந்து, எப்போது வரும் என தெளிவான தகவல் இல்லை. மை வைப்பது வங்கிப் பணியாளர்களுக்குக் கூடுதல் பணியாக இருக்கும் என்பதைவிட இதன் மூலம் கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியுமா எனத் தெரியவில்லை.
வியாபாரிகள், கூலி வேலை செய்பவர்கள், நடுத்தர மக்கள் ஆகியோருக்கு இத்திட்டம் தலைவலியாக மாறும். பெரிய முதலாளிகளைப் பிடிக்க சாதாரண மக்களின் கைவிரல்களில் மை வைப்பது என்பது ஒரு நியாயமாக தெரியவில்லை. பிளிப்கார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு வியாபாரம் செய்கின்றன. ஆனால், அவை நஷ்டக் கணக்கு காட்டுகின்றன. மேலும், சில நிறுவனங்கள் வரி இல்லாத நாடுகளில் வியாபாரங்கள் தொடங்கி வரி ஏய்ப்பு செய்கின்றன. அத்தகைய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், சாதாரண மக்களைக் கஷ்டப்படுத்துவது நியாயமில்லை.
சி.எச்.வெங்கடாச்சலம் (அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொதுச் செயலாளர்):
ஏற்கெனவே வேலைபளுவால் அவதிப்பட்டு வரும் வங்கி ஊழியர்களை மத்திய அரசின் இந்த முடிவு மேலும் கஷ்டப்படுத்தும். அத்துடன் பொது மக்களையும் எரிச்சல் அடைய வைக்கும். இப்பிரச்சினையை அரசு இதுபோன்று அணுக கூடாது. ஒருசிலர் செய்யும் தவறுக்காக நேர்மையான பொது மக்களை வதைக்கக் கூடாது. மத்திய அரசு இத்திட்டத்தை ரத்து செய்யவில்லை என்றால் ஊழியர்கள் தற்போது அரசுக்கு அளித்து வரும் ஆதரவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
திருநாவுக்கரசு (ஓய்வுபெற்ற பொதுப்பணித் துறை பொறியாளர்):
ஒருவரே மீண்டும் மீண்டும் வந்து பணத்தை எடுப்பதைத் தடுக்க கையில் மை வைக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கதுதான். ஆனால், கோடிக்கணக்கில் கறுப்புப் பணம் வைத்திருப்போர் நிச்சயம் இதுபோன்ற வழிகளை நாடமாட்டார்கள். சில லட்சங்களை வைத்துக்கொண்டு மாற்ற முடியாமல் தவிப்போர் வேண்டுமானால், ஆட்களை நியமித்து கமிஷன் அடிப்படையில் பணம் எடுத்து வரச் சொல்லலாம். இதை மட்டும்தான் மை வைக்கும் நடவடிக்கை மூலம் தடுக்க முடியும்.
தேவசகாயம் (ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி):
கறுப்புப் பணத்தை ரொக்கமாக வைத்திருப்போர் குறைவு. அவர்கள் ஏற்கெனவே தங்கம், வெள்ளி, ரியல் எஸ்டேட் என பல்வேறு வழிகளில் முதலீடு செய்திருப்பார்கள். மேலும், கறுப்புப் பணத்தை வங்கியில் மாற்ற முடியாது என்பதால் கள்ளச் சந்தையில் 10 முதல் 20 சதவீதம் வரை தற்போது கமிஷன் அளித்து மாற்றி வருகின்றனர். எனவே, பணம் எடுப்போருக்கு மை வைக்கும் நடவடிக்கை என்பது, அடித்தட்டு மக்களுக்குத்தான் மேலும் சிரமத்தை அளிக்கும்.
முகமது அலி ஜின்னா (திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர்):
வங்கியில் அடையாள அட்டையை சமர்ப்பித்துவிட்டுதான் பணத்தை மாற்ற முடியும் என்ற நிலை இருப்பதால், பணத்தை யார் எத்தனை முறை பெற்றார்கள் என்ற ஆதாரம் இருக்கும். எனவே, வங்கி வழியாக கறுப்புப் பணத்தை மாற்றுவது 20 சதவீதம் வேண்டுமானால் நடைபெற லாம். ஆனால், பணத்தை மாற்றும் பெரும் பாலானோர் அடித்தட்டு மக்களாகத்தான் இருக்கின்றனர். 500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பு அவசர கதியில் வெளியிடப் பட்டுள்ளது. அதன்மூலம் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து அலசி ஆராய்ந்திருந்தால் மை வைப்பது குறித்து தற்போது அறிவிக்க வேண்டிய நிலை இருந்திருக்காது.