விஷ்ணு பிரியா தற்கொலை விவகாரம்: வழக்கு ஆவணங்கள் சிபிஐ வசம் ஒப்படைப்பு

விஷ்ணு பிரியா தற்கொலை விவகாரம்: வழக்கு ஆவணங்கள் சிபிஐ வசம் ஒப்படைப்பு
Updated on
1 min read

திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலை தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி போலீஸார் சிபிஐ வசம் ஒப்படைத்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ் பள்ளிப்பாளையம் அருகே சில மாதங்களுக்கு முன்பு தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

முதலில் இது தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. அவர் காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டிருப்பது பின்னர் தெரிய வந்தது. இதையடுத்து, இந்த வழக்கை விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இதில் ஒரு பிரிவு திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணு பிரியா தலைமையில் அமைக்கப்பட்டது. கோகுல்ராஜ் கொலை குறித்து நேரடி விசாரணையில் விஷ்ணு பிரியா ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார். உயர் அதிகாரிகளின் நெருக்கடி காரணமாக அவர் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்று அவரது தந்தை குற்றம் சாட்டினார். இதுபற்றி சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடுமாறு வலியுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க அப்போதைய டிஜிபி கே.அசோக்குமார் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், விஷ்ணு பிரியா வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்தால் உண்மை வெளிவராது. எனவே, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விஷ்ணு பிரியாவின் தந்தை ரவி வழக்கு தொடர்ந்தார்.

இதைத் தொடர்ந்து சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், விஷ்ணு பிரியா தொடர்பாக சேகரித்த அனைத்து தகவல்களையும் சிபிஐயிடம் சிபிசிஐடி போலீஸார் ஒப்படைத்துள்ளனர். அதன் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in