

சென்னை அருகே உள்ள ரெட்டேரியில் அரைகுறையாக செய்த பராமரிப்புப் பணியால் கரை வலுவிழந்து காணப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் வட்டத்தில் 380 ஏக்கரில் பரந்து விரிந்து அமைந்துள்ளது ரெட்டேரி. கடந்தாண்டு டிசம்பர் 1-ம் தேதி பெய்த மிக பலத்த மழையால் சென்னை அருகேயுள்ள ஏரிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. அதுபோல ரெட்டேரியும் நிரம்பி அதிகளவில் உபரிநீர் வெளியேறியதால் ஏரியையொட்டி அமைந்துள்ள அறிஞர் அண்ணா நகருக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் புழலில் உள்ள திருமண மண்டபத்தில் 15 நாட்களுக்கும் மேலாக தங்க வைக்கப்பட்டனர்.
இதனால் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே ரெட்டேரியை தூர்வாரி, கரையைப் பலப்படுத்த வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தினர். அதன்படி, ரெட்டேரியை புனரமைக்கும் பணி கடந்தாண்டு தொடங்கியது. மண் கொட்டி ஏரிக் கரைகள் பலப்படுத்தப்பட்டன. மேலும், கரையின் மேற்பகுதியில் கிரானைட் கற்கள் பதித்து நடைபாதை அமைக்கப்பட்டது. ஆனால், கரையை சரிவர பலப்படுத்தாததால் லேசான மழைக்குக்கூட கரையில் இருந்து மண் கரைந்து ஏரிக்குள்ளும், வெளிப்பகுதிக்கும் செல்கிறது அதனால் கரை வலுவிழந்து காணப்படுகிறது.
மேலும் கரையின் மேற்பகுதி யில் சமதளமாக கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டு இருபுறமும் சிறியளவில் சுவரும் எழுப்பப்பட் டிருப்பதால் மழைபெய்யும்போது மழைநீர் ஏரிக்குள்ளும், வெளிப் பகுதிக்கும் போகாமல் கரையிலே தேங்குகிறது. இதனால் கரையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கிரானைட் கற்கள் உடைந்து அங்கேயும் மண் சரிந்து கரையை வலுவிழக்கச் செய்கிறது. கிரானைட் கற்கள் பதித்து ஓராண்டுக்குள்ளே பல இடங்களில் கிரானைட் உடைந்து கிடப்பது பராமரிப்புப் பணியின் அவலத்தைக் காட்டுகிறது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கொரட்டூர் ஏரி, ரெட்டேரி, அம்பத்தூர் ஏரி ஆகியவற்றைத் தூர்வாரி ஆழப்படுத்தி, கரையைப் பலப்படுத்தி, கிரானைட் கற்கள் பதித்து நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்து இந்த ஏரிகளைச் சுற்றுலா தலமாக்குவதுடன் படகு சவாரியும் விடுவதற்கு ரூ.85 கோடியை அரசு ஒதுக்கியது.
ரெட்டேரியில் ஆழப்படுத்துதல், கரையைப் பலப்படுத்துதல், கிரானைட் பதிப்பது ஆகிய பணிகள் முடிந்துள்ளன. அதுபோல கொரட்டூர் ஏரியில் ஆழப்படுத்துதல் பணி ஒருபகுதி முடிந்திருக்கிறது. கரையைப் பலப்படுத்தி கிரானைட் பதிக்கப்பட்டுவிட்டது. அம்பத்தூர் ஏரியில் ஆழப்படுத்துதல், கரை யைப் பலப்படுத்துதல் ஆகியன முடிந்துவிட்டன. அங்கே நடை பாதை அமைத்து கிரானைட் பதிக்க வேண்டியுள்ளது. இதுவரை ரூ.33 கோடிக்கு பணிகள் முடிந்துள்ளன.
ஏரிகளில் படகுகள் நிறுத்துமிடம், கரைகளில் புல்வெளி அமைத்தல், வெளிப் பகுதியில் மரம் நடுதல் உள்ளிட்ட இதர பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது. ரெட்டேரி கரையில் கிரானைட் கற்கள் பதித்து போடப்பட்ட நடைபாதையில் சமூக விரோத சக்திகள் மோட்டார் சைக்கிள் ஓட்டுகின்றனர். அவர்களது பொறுப்பற்ற செயலால் ஏரி பொலிவிழக்கிறது. பழுதை சரிசெய்ய அவ்வப்போது மராமத்து வேலைகள் நடக்கின்றன என்றார்.
இருப்பினும், ரெட்டேரியில் சரி வர பராமரிப்புப் பணிகள் நடை பெறாததால் கரைகள் ஆங்காங்கே வலுவிழந்திருப்பதைக் காணமுடி கிறது.