

முதல்வரின் உடல் நலம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட 5 பேருக்கு உயர் நீதிமன்றம் நேற்று நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். இவரது உடல் நலம் குறித்து பல்வேறு வதந்திகளை சமூக வலைதளங்களில் பரப்பியதாக 50க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 9-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதில் கைதான திருச்செங்கோட்டைச் சேர்ந்த சதீஷ்குமார், தூத்துக்குடியைச் சேர்ந்த சகாயம், மதுரையைச் சேர்ந்த மாடசாமி, அந்தோணி ஜேசுராஜ், பாலசுந்தரம் ஆகிய 5 பேர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நீதிபதி ஆர்.மாலா முன்பு நடந்தது. அப்போது 5 பேருக்கும் நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.