“காணாமல் போகும் மீனவர்களைக் கண்டறிய புதிய தொழில்நுட்பம்” - அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களுக்கான மாநாட்டில் பேசும் அமைச்சர் மனோ தங்கராஜ்
மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களுக்கான மாநாட்டில் பேசும் அமைச்சர் மனோ தங்கராஜ்
Updated on
2 min read

சென்னை: “காணாமல் போகும் மீனவர்களைக் கண்டறியும் புதிய தொழில்நுட்பங்களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களுக்கான இரண்டு நாள் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு உரையாற்றினார். இதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், "கடந்த இரண்டு நாட்களாக தேசிய அளவிலான டிஜிட்டல் இந்தியா மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்களுக்கான மாநாடு நடைபெற்றது. பல்வேறு தலைப்புகளில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை புரிந்தவர்கள் இதில் பேசினார்கள்.

உண்மையிலே கடந்த ஓராண்டு காலத்தில் நம்முடைய முதல்வர் தலைமையில் தமிழகத்தில் எடுக்கப்பட்ட முன்னெடுப்புக்களை பலரும் பாராட்டினார்கள். ஏனென்றால் தமிழகத்தில் முதல்வருடைய வழிகாட்டுதலின் பேரில் பல முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக “கடைசி மைல் இணைப்பு” (Last Mile Connectivity) என்று சொல்லப்படும் அனைத்து கிராமங்களுக்கும் இணைய சேவைகள் தடையின்றி கிடைப்பதற்கான முயற்சி, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் எடுக்கப்பட்டிருக்கிறது.

அது போன்று எல்லா மக்களுக்கும் இணைய வழியில் அரசினுடைய சேவைகளை பெறுகின்ற வசதி இ-சேவை மூலமும் ஒவ்வொரு அலுவலகத்திலும், சட்டமன்றம் உள்ளிட்ட அனைத்தையும் “மின் அலுவலகம்” மூலமாக இணைப்பது, இ-அலுவலகம் திட்டத்தினை மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்துவது, அதே போன்று தரவுகளின் அடிப்படையிலான அரசு தரவுகளை வைத்து திட்டங்கள் தீட்டுகின்ற திட்ட உதவிகள் கொடுக்கின்ற அந்தத் திட்டம் போன்றவை மிகுந்த வரவேற்பை இங்கு பெற்றிருக்கிறது.

இதுபோன்று தமிழகத்திலே தொழில்முனைவோர், புதுமையான முயற்சிகள், போன்றவற்றிற்கு அளித்து வரும் முக்கியத்துவமும் அங்கு இருக்கக்கூடிய நல்ல ஒரு சூழலை ஏற்படுத்துகிறது. இந்த மாநாடு மூலமாக பல்வேறு மாநிலங்களில் எப்படி ஐடி துறை செயல்படுகிறது என்பதை நாங்கள் கவனமாக கவனிக்க முடிந்தது.

நம் மீனவர்கள் காணாமல் போகின்ற நேரத்தில் அவர்களை கண்டுபிடிப்பது போன்றவற்றில் மிகப் பெரிய சிக்கல் தொடர்ந்து வருகிறது. அவற்றிற்கான தீர்வு காண சில தொழில்நுட்பங்களை நான் இங்கு பார்வையிட்டேன். உண்மையிலேயே சிறந்ததாக இருக்கிறது. அதை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கு அங்கு இருக்கக்கூடிய மீன்வள துறை அமைச்சரோடு பேசி அதற்கான முயற்சிகளை முன்னெடுக்கலாம்.

இன்று மருத்துவத் துறையில் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டிருக்கிறது. பல கண்டுபிடிப்புகள் மிகச் சிறப்பாக இருக்கிறது. இன்று ஆளில்லா விமான தொழில்நுட்பம், விவசாயம் போன்ற துறைகளில் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு, அதேபோன்று காவல் துறையில் போக்குவரத்து ஒழுங்குபடுத்துவது போன்றவற்றுக்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. தொழில் துறையில் இயந்திர மனித தொழில்நுட்பம் பயன்பாட்டில் அதிகம் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இப்படி ஒவ்வொரு துறைகள் மூலமாக என்ன வாய்ப்புக்களை பயன்படுத்த முடியும் என்பதை நாங்கள் தீவிரமாக ஆராய்ந்துரைக்கின்றோம்.

அது மட்டும் அல்ல, இன்றைக்கு பல்வேறு நாடுகளில் இருக்கிற சிறப்பு முயற்சிகளை எல்லாம் தமிழகத்திற்கு கொண்டு வந்து தமிழகத்தை டிஜிட்டல் சேவைகளில் முதல் வரிசையில் வைக்க வேண்டும் என்ற தமிழக முதல்வரின் கனவுகளை இந்த துறை நிச்சயமாக நினைவாக்கும்" என்று அமைச்சர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in