புதுச்சேரியில் மின்துறை தனியார்மய டெண்டரை எதிர்த்து வழக்கு தொடர எதிர்க்கட்சிகள் முடிவு

புதுச்சேரியில் மின்துறை தனியார்மய டெண்டரை எதிர்த்து வழக்கு தொடர எதிர்க்கட்சிகள் முடிவு
Updated on
2 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் சட்ட விதிமுறைகளுக்கும் உட்படாமல், மின்துறை தனியார்மயத்துக்கான டெண்டர் கோரி உள்ளதை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகுவது என அம்மாநில எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளனர். புதுச்சேரி போர்க்களமாக மாறி உள்ள சூழலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முதல்வர் ரங்கசாமி வாய் மூடி மௌனமாக வேடிக்கை பார்ப்பது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளனர்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கூட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்.பி. வைத்திலிங்கம், எதிர்க்கட்சித் தலைவர் சிவா, எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, சம்பத், வைத்தியநாதன், காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் சலீம், சிபிஎம் மாநில செயலர் ராஜாங்கம், விசிக நிர்வாகி தமிழ்மாறன், சிபிஐ (எம்-எல்) சோ. பாலசுப்பிரமணியன், மதிமுக தலைவர் கபிரியேல், மாணவர் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மின்துறை தனியார் மயத்தை எதிர்த்து, மின்துறை ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இம்மாநில மக்கள் நலன் சார்ந்த அவர்களின் கோரிக்கையை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆதரித்து வருகிறது ஆதரவு இயக்கத்தையும் நடத்தி உள்ளது. போராடும் ஊழியர்களை சமூக விரோதிகள் போல் மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் சித்தரிப்பது தவறானது. அதேபோல் எஸ்மா சட்டம் பாயும் என ஆளுநர் தமிழிசை கூறியது தவறான அதிகாரத்தின் உச்சம். போராடிய 300 மின்துறை ஊழியர்களை இரவில் கைது செய்தது கண்டிக்கத்தக்கது.

புதுச்சேரி போர்க்களமாக மாறி உள்ள சூழலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முதல்வர் ரங்கசாமி வாய் மூடி மௌனமாக வேடிக்கை பார்ப்பது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. புதுச்சேரி மின்துறைக்கு சொந்தமான இருபதாயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை தனது கார்ப்பரேட் கூட்டாளிகளுக்கு தாரை வைப்பதற்கான திட்டமே இந்த தனியார்மய நடவடிக்கையாகும். மின்துறை ஊழியர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் திரும்ப பெறப்பட வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மின்துறை ஊழியர்களை அழைத்துப் பேச வேண்டும். மின்துறை தனியார்மய நடவடிக்கையை உடனடியாக புதுச்சேரி அரசு கைவிட வேண்டும்.

இது தொடர்பாக, மாநில மக்களின் கருத்துக்களை அறிய வேண்டும். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி கருத்தை அறிய வேண்டும்.புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தைக் கூட்டி முதல்வர் விவாதிக்கவேண்டும். மின் தனியார் மயத்திற்கு வழிவகை செய்யும் மின்சார திருத்த மசோதா நாடாளுமன்ற நிலைக் குழுவிற்கு அனுப்பப்பட்டு, அது தொடர்பாக எந்த கூட்டமும் நடைபெறவில்லை. பாஜக ஆளும் மாநிலங்கள் கூட தனியார் மின் மயத்தை ஏற்கவில்லை. எந்த சட்ட விதிமுறைகளுக்கும் உட்படாமல், டெண்டர் கோரி உள்ளதை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகுவது என மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து அனைவரும் அங்கிருந்து முதலியார்பேட்டை காவல் நிலையத்துக்கு சென்றனர். அங்கு மின்துறை ஊழியர்கள் மீதான வழக்கு தொடர்பான விவரங்களை விசாரித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in