

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் உள்ளது. இங்கு தூத்துக்குடியில் இருந்து ஒரு பேருந்தில் 40 பேர் சுற்றுலா பயணிகளாக நேற்று இரவு கிளம்பி இன்று (3ம் தேதி) காலை பூண்டிக்கு வந்தனர். அவர்களில், சிலர் அருகே இருந்த கொள்ளிடம் ஆற்றில், குளிப்பதற்காக இறங்கியுள்ளனர். இதில் எதிர்பாராத விதமாக 6 பேர் ஆற்றில் மூழ்கி மாயமானார்கள். அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு படையினர் ஆற்றில் மூழ்கியவர்களை தேடினர். இதில், தூத்துக்குடி, சிலுவைபட்டி கோவில் தெருவை சேர்ந்த துரைராஜ் மகன்கள் சார்லஸ்(38), பிருத்திவிராஜ்(35), தாவித்ராஜ் (30) ஆகிய மூவரின் உடலை மீட்டனர்.
இதையடுத்து, ஆற்றில் மூழ்கிய தூத்துக்குடி, சிலுவைப்பட்டி கோவில் தெருவை சேர்ந்த தெம்மைராஜ் மகன் ஈசாக், சுந்தரராஜ் மகன் பிரவின்ராஜ், செல்வராஜ் மகன் கெர்மஸ் ஆகிய மூன்று பேரையும் தீயணைப்பு வீரர்கள், போலீஸார், உறவினர்கள், கிராம மக்கள் தேடி வருகின்றனர். சுற்றுலா வந்த இடத்தில் ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.