

புதுச்சேரி: “புதுச்சேரியில் அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனம் அமலாகியுள்ளது; துணை ராணுவத்தினரை இறக்கி எஸ்மா சட்டத்தை காட்டி போராடும் மக்களையும், அரசு ஊழியர்களையும், கட்சியினரையும் ஆளுநர் தமிழிசை மிரட்டிப் பார்க்கிறார். இந்த அடக்குமுறை ஜனநாயக நாட்டில் எடுபடாது” என்று அம்மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ''மின்சாரத் துறையை தனியார்மயமாக்க மக்கள் கருத்தையோ, அரசியல் கட்சிகள் கருத்தையோ கேட்காமல் சர்வாதிகார முறையில் செயல்பட்டுள்ளனர். எஸ்மா சட்டம் அமலாகும் என மிரட்டுகின்றனர். மக்கள் தெருவில் இறங்கிப் போராடுகின்றனர். புதுச்சேரியில் அறிவிக்காத அவசரநிலை பிரகடனம் அமலாகியுள்ளது. துணை ராணுவத்தினரை ஆளுநர் இறக்கியுள்ளார். மத்திய அரசின் ஏஜென்டாக மக்களை பற்றி கவலையின்றி செயல்படுகிறார்.
எஸ்மா சட்டத்தைக் காட்டியும், துணை ராணுவத்தினரை இறக்கியும் மக்களையும், அரசு ஊழியர்களையும், கட்சியினரையும் மிரட்டுகிறார். இந்த அடக்குமுறைகள் ஜனநாயக நாட்டில் எடுபடாது. ஆளுநரின் பேச்சும் திமிராகவுள்ளது. முதல்வர் ரங்கசாமி டம்மி என்பதையும், தானே சூப்பர் முதல்வர் என்பதையும் தமிழிசை நிரூபித்துள்ளார். மக்கள் விரோத செயல்பாட்டை மக்கள் மீது ஆளுநர் திணிக்கிறார்.
புதுச்சேரியில் அசாதாரண சூழல் நிலவுகிறது. தனக்கு விருப்பமில்லாமல் மின்துறை தனியார்மயமாக்கும் விஷயம் திணிக்கப்பட்டுள்ளதா என்பதை முதல்வர் ரங்கசாமி பகிரங்கமாக தெரிவிக்கவேண்டும். மின்துறையை தனியார்மயமாக்கும் டெண்டரை நிறுத்திவைத்து துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தி, கருத்து கேட்கவேண்டும். மின்துறையை தனியார் மயமாக்கினால் மின்கட்டணம் உயராது என்று உத்தரவாதத்தை அரசு தருமா?
தனது முதல்வர் பதவிக்கான நாற்காலியை காக்கவே முதல்வர் ரங்கசாமி வாய்மூடி மவுனமாக உள்ளார். மதசார்பின்மையுடன் செயல்படுவோம் என்று பதவிப் பிரமாணம் செய்த புதுச்சேரி அமைச்சர்கள் தங்கள் பதவியை தக்க வைத்துக்கொள்ள ஆர்எஸ்எஸ் சீருடையுடன் அணிவகுப்பில் பங்கேற்றுள்ளனர். இது அவமானம். இவர்கள் அமைச்சர்களாக இருக்க தகுதியற்றவர்கள். புதுச்சேரியை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அலங்கோலமாகவுள்ளது. முதல்வர் மீது பாஜகவினர் ஊழல் குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள். பதிலுக்கு என்.ஆர்.காங்கிரஸ் தேர்தலுக்கு தயாரா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்" என்று அவர் கூறினார்.