Last Updated : 03 Oct, 2022 06:49 AM

 

Published : 03 Oct 2022 06:49 AM
Last Updated : 03 Oct 2022 06:49 AM

ஸ்டார் ரேட்டிங் குறித்து வாடிக்கையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மின்சாதன கடை ஊழியர்களுக்கு இலவச பயிற்சி: மின்வாரியத்தின் புதிய திட்டம்

பிரதிநிதித்துவப் படம்.

சென்னை: அதிக ஸ்டார் ரேட்டிங் கொண்ட மின்சாதனங்களை பயன்படுத்துவதன் மூலம் மின்சாரத்தை சேமிப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, மின்சாதனங்கள் விற்கப்படும் கடைகளின் ஊழியர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.

மின்சாரத்தை சேமிக்கும் நோக்கில், வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு ஸ்டார் ரேட்டிங்கை மத்திய அரசு வழங்கி வருகிறது. குறிப்பாக, அதிக ஸ்டார் ரேட்டிங்கொண்ட சாதனங்கள் குறைந்த அளவு மின்சாரத்தில் அதிக திறனோடு செயல்படும்.இதற்காக, மத்திய எரிசக்தி துறை, ‘பீரோ ஆஃப் எனர்ஜி எஃபீஷியன்சி (பிஇஇ)’ என்ற நிறுவனத்தை ஏற்படுத்தி, அதன் மூலம், வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு ரேட்டிங் வழங்கி வருகிறது. அத்துடன், இதுதொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இதன்படி, தமிழகத்தில் மின் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை (டான்ஜெட்கோ) நோடல் ஏஜென்சியாக நியமித்துள்ளது. எனவே, டான்ஜெட்கோ நிறுவனம் ஆலோசகர்களை நியமித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து, இந்த விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டுள்ள ஆலோசகர் சி.மணிவண்ணன், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது:

ஒவ்வொரு வீட்டிலும் மின்விசிறி, ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏசி, அயர்ன்பாக்ஸ் என குறைந்தது 10 மின்சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன்மூலம் அதிக மின்சாரம் செலவாகிறது. மின்சாரத்தை சேமிக்கும் சாதனங்களுக்கு ஏற்ப ஸ்டார் ரேட்டிங் என்ற லேபிளை பிஇஇ நிறுவனம் வழங்குகிறது. குறைந்தபட்சம் 1 முதல் அதிகபட்சமாக 5 ஸ்டார் வரை ரேட்டிங் வழங்கப்படுகிறது. அதிக ஸ்டார்ரேட்டிங் உள்ள சாதனத்தை பயன்படுத்தும் போது அதிக அளவு மின்சாரம் சேமிக்கப்படுவதோடு, அதன் நீடித்து உழைக்கும் தன்மையும் அதிகரிக்கிறது.

உதாரணமாக, 3 ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஏசியை பயன்படுத்தும் போது 10 யூனிட் மின்சாரம் செலவாகிறது என்றால், 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஏசியை பயன்படுத்தினால் 4 யூனிட் மின்சாரம்தான் செலவாகும். இதன்மூலம், 6 யூனிட் மின்சாரம் மிச்சமாகும்.

குறைந்த ஸ்டார் ரேட்டிங்கைவிட அதிக ஸ்டார் ரேட்டிங் கொண்ட மின்சாதனங்களின் விலை சற்று அதிகமாக இருக்கும். ஆனால்,வாடிக்கையாளர்கள் இந்த விலை வித்தியாசத்தை பார்க்காமல், இந்த சாதனங்களை பயன்படுத்துவதன் மூலம் எவ்வளவு மின்சாரம் சேமிக்கப்படுகிறது, மின்கட்டணம் குறைவதன் மூலம் எவ்வளவு பணம் சேமிப்பாகிறது என்பதை பார்க்க வேண்டும்.

எனவே, இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, வீட்டு உபயோக மின்சாதனங்களை விற்பனை செய்யும் கடைகளில் உள்ள விற்பனையாளர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கிறோம்.

ஸ்டார் ரேட்டிங் கொண்ட மின்சாதனங்களை பயன்படுத்துவதால் எவ்வளவு மின்சாரத்தை சேமிக்க முடியும், ஏசி, டிவி போன்ற மின்சார சாதனங்களை ரிமோட் மூலம் நிறுத்துவதைவிட சுவிட்ச்சையே அணைத்து வைப்பதால் எவ்வளவு மின்சாரம் சேமிக்க முடியும் உள்ளிட்ட விஷயங்களை அவர்களுக்கு கற்றுத் தருவோம்.

அவர்கள் அதை தங்களிடம் பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் எடுத்துச் சொல்லி மின்சாதனங்களை விற்பனை செய்வார்கள். இதன்மூலம், மின்சாதனம் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் ஸ்டார் ரேட்டிங் பற்றி அறிந்து கொண்டு, பொருட்களை வாங்குவார்கள். இதனால், வாடிக்கையாளர்களுக்கு மின்சார செலவு குறைவதோடு, தரமான மின்சாதனங்களை வாங்க முடியும்.

தற்போது மின்சாதனப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில் உள்ள ஊழியர்களுக்கு இந்த இலவச பயிற்சியை வழங்கி வருகிறோம். இதேபோல, அரசு கல்லூரிகளின் மாணவ, மாணவிகளுக்கும் இதுதொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x